Home One Line P1 ‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ – என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் தேசிய அளவிலான பரப்புரை நடத்தப்படுகிறது

‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ – என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையில் தேசிய அளவிலான பரப்புரை நடத்தப்படுகிறது

2731
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மைய ஆண்டுகளில் பல தமிழ்ப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த நிலைமையை சீர்ப்படுத்தும் வகையில் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” என்ற முழக்கத்துடனான தேசிய அளவிலான பரப்புரைத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அளவிலான சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் தலைமையேற்றிருக்கிறார்.

தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடக்கி மிக உயரிய கல்விப் பட்டங்களைப் பெற்றவர் என்பதோடு, கடந்த காலங்களில் செடிக் எனப்படும் பிரதமர் துறை இலாகாவின் இந்தியர் மேம்பாட்டுப் பிரிவுக்கு தலைமை இயக்குநராகவும் பதவி வகித்திருக்கிறார். எனவே, நாடு முழுமையிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர் என்ற முறையில் இராஜேந்திரன் இந்த தமிழ்ப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை இயக்கத்திற்கு தலைமையேற்றிருப்பது பொருத்தமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

“இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் சமூகத்தின் முக்கிய அடையாளமாகவும் தமிழை நிலைநாட்டும் களமாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகின்றன. இந்நாட்டில் தமிழைக் காப்பதிலும் தமிழ்ப்பள்ளிகளை நிலைநாட்டுவதிலும் அனைவரது பங்கும் அடங்கியுள்ளது. அவ்வகையில் முதலாம் ஆண்டில் நம் பிள்ளைகள் தமிழ்க்கல்விக் கற்க இந்தத் ‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ 2020/2021 என்ற தேசிய அளவிலான பரப்புரைத் திட்டம் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இதேபோன்ற தேசிய அளவிலான ‘தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு’ திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் துறையின் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஊடகங்கள், அரசு சாரா இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள், தனி நபர் என பல்வேறு தரப்பினரின் மிகப் பெரிய அளவிலான ஆதரவு கிடைத்தது; தொடர்ந்து கிடைத்தும் வருகிறது. இதன் பலனாகத் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கவே மீண்டும் இம்முயற்சி முன்னெடுக்கப் படுகிறது” என இதன் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

இந்த இயக்கத்தின் அதிகாரத்துவ பரப்புரைத் தொடக்கம் கடந்த வாரத்தில் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப் பள்ளியில் தொடங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இராஜேந்திரன் “தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பதுதான் இந்த பரப்புரை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டுக்கு என்று மட்டுமல்லாமல், அடுத்து வரும் ஆண்டுகளிலும் நமது தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். தற்போதைக்கு ஆங்காங்கே செய்யப்பட்டு வரும் பரப்புரைகளை ஒருமுகப்படுத்தி ஒன்றிணைக்கவிருக்கிறோம். தேசிய அளவில் இதை ஒரு திட்டமாக முன்னெடுக்கப் போகிறோம்” என்று கூறினார்.

“அடுத்த ஒரு மாதத்திற்கு நாங்கள் மட்டுமின்றி ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரப்பவிருக்கிறோம். இதில் நாங்கள் மட்டும் பேசாமல் மற்றவர்களையும் பேசவைக்கப்போகிறோம். எனவே, அனைத்துத் தரப்பினரின் ஆதரவு இந்த பரப்புரை இயக்கத்திற்குத் தேவை. குறிப்பாக ஊடகங்களின் பெரும் பங்கை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்” என்றும் இராஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.

“தமிழ்ப் பள்ளிகளில் படித்தவர்கள் பரவலாக அதிக அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கின்றனர். தமிழ்ப் பள்ளிகளுக்கு வருபவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். எனவே இவர்களுக்கு இந்தத் தமிழ்ப் பள்ளிகளில்தான் அரவணைப்பும் வழிகாட்டுதலும் வழங்கப்பட வேண்டும்” என்றும் இராஜேந்திரன் தெரிவித்தார்.

இச்சிறப்பு நடவடிக்கை செயற்குழுவினரின் விபரம் பின்வருமாறு :

தலைவர்         :  பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் .இராஜேந்திரன்

துணைத் தலைவர் :  உயர்திரு மொ.முத்துசாமி

செயலாளர்       :  முனைவர் வீ. வீரமோகன்

செயலவையினர்   : 

முனைவர் கோவி சிவபாலன்

முனைவர்  பழநி கிருஷ்ணசாமி

உயர்திரு முருகையா பொன்னன்

உயர்திரு  சுப்பிரமணி

உயர்திரு  காந்தி காசிநாதன்

உயர்திரு ஓம் தமிழ் முகிலன்

“இத்திட்டம் நல்ல விளைப்பயனைக் கொண்டுவர மலேசியத் தமிழ் ஊடகங்கள், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், தமிழ்ப் பள்ளி ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாநில அளவிலான கல்வி அதிகாரிகள், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, அரசியல் தலைவர்கள், அரசு சாரா இயக்கங்கள், தமிழ் ஆர்வர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரின் பங்களிப்பும் நாடப்படும்; அவர்களின் ஒத்துழைப்பையும் வரவேற்கிறோம். இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு அடுத்து தமிழை நிலைநாட்டிவரும் பெரும்பங்கை தமிழ் ஊடகங்கள்  பெரும் பங்காற்றி வருகின்றன. ஊடகங்களின் சீரிய தமிழ்ப்பணியை இந்த வேளையில் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்” என்றும் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தேசியப் பரப்புரை இயக்கம் தொடர்பான விவரங்களுக்கு : முனைவர் வீரமோகன் – 019-675 6185