திராவிடம் – ஒரு விளக்கம்
‘திராவிடம்’ என்றால் தலையில் இடிவிழுந்ததுபோல் கதறவேண்டியதில்லை. திராவிடம் என்பதற்கு மிக நீண்டவிளக்கம் தரலாம். இங்கு மிக மிகச் சுருக்கமாக ஒரு சான்றை மட்டும் குறிப்பிட்டால் போதுமென்று நினைக்கிறேன்.
தலைநகர் உமா பதிப்பகம் வெளியிட்டுள்ள நற்றமிழ்ப் பேரகராதியில் (2017, பக்கம் 340), திராவிடம் என்பதற்குத் “தமிழ்நாடு, தமிழ்மொழி, இந்தியாவின் விந்திய மலைகளுக்குத் தென்பகுதி நாடு” என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. திராவிடம் என்ற சொல் இடம்பெற்றிருப்பதால் மாணவர்கள் தமிழ் அகராதிகளைத் தொடவே கூடாது; பள்ளி நூலகங்களில் தமிழ் அகராதிகள் இடம்பெறவே கூடாதென்று சொல்லலாமா?
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 25 மொழிகள் திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்கின்றனர் மொழியியல் ஆராய்ச்சி வல்லுநர். அதனை வேறு எந்தச் சொல்லால் குறிக்க முடியும்? தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாள மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூற முடியுமா? திராவிடமொழிக் குடும்பம் என்றுதான் கூறமுடியும். இதனை எல்லாம் ஆழ்ந்து எண்ணித் தெளிந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும், அல்லது தமக்குத் தொடர்பில்லாத – தேர்ச்சியில்லாத பணியில் ஈடுபடாதிருத்தல் வேண்டும்.
இந்தியாவின் நாட்டுப் பண்ணில், (National Anthem) ‘திராவிட’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அதன் பொருள் இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களைக் குறிப்பதாகும். இங்கு அது இடப்பெயர்க் குறிப்பேயல்லாமல் கொள்கைக் குறிப்பாகக் கொள்ளமுடியுமா?
இவற்றையெல்லாம் உணராமல், கற்றோரின் கருத்தை ஆராயாமல் நல்ல நெறியொடு வளர்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பைக் கறைப்படுத்த முயலக்கூடாது. பாடநூல் ஆசிரியர்களைக் கிள்ளுக்கீரைகளாக எண்ணக்கூடாது; பள்ளி ஆசிரியர்களின். கல்வித்தொண்டைக் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழ்ப்பள்ளி மாணவர்களை விரிந்து பரந்த அறிவு பெறவிடாமல் குறிப்பிட்ட வேலிக்குள் முடக்க எண்ணக்கூடாது?
“பள்ளிப் பாடநூலில் தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற கருத்துத் திணிக்கப்பட்டிருக்கிறது” என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
மலையாள நண்பர்களுக்கு மதங்கடந்த ஓணம்போல, சீன இனத்தவர்க்குச் சமயம் கடந்த சீனப்புத்தாண்டு போலத் தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட – இந்திய சமுதாயத்தில் 85 விழுக்காட்டிற்கு மேலுள்ள தமிழர்க்குத் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு. இதனில் மீண்டும் புராணத்தைப் புகுத்த முயலக்கூடாது.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாடும் உலகளாவிய வெற்றிகளும்
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்ப்பள்ளிகளின் நிலை, மாணவர் அடைவுநிலை ஆசிரியர்களின் தகுதி போன்றவற்றை மனத்தில் கொண்டு பேசுதல் கூடாது. இன்று 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பட்டதாரிகள்; முறையாகப் பயிற்சிபெற்றவர்கள்; முதுகலை பெற்றவர் பலர் உளர்; முனைவர் பட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்பவர்களையும் காணமுடிகிறது.
‘கொரோனா’ நோய்பரவல் காலமான இன்று இயங்கலை (online) மூலம் கற்றல் கற்பித்தலைத் திறம்பட நடத்தும் தகுதிமிக்கார் அவர்கள். அதனால், மாணவர் தரம் பல வகைகளில் மேம்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளி மாணவர்திறன், எப் பள்ளிமாணவர் திறனுக்கும் குறைந்ததன்று. மாணவர்களின் பெற்றோர் வாழ்க்கைத்தரமும் பிள்ளைகள் கல்வியில் அவர்கள் கொண்டுள்ள நாட்டமும் முன்பிருந்ததைவிடப் பன்மடங்கு உயர்ந்துள்ளது; மேலும் உயரும்; உயரவேண்டும்.
ஆக்கத்திறன்
தாய்மொழி வழியில் கற்பவர்க்கு ஆக்கத்திறன் மிகுந்திருக்கும் என்பது உலகக் கல்வியாளர் கருத்தாகும். அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் திறன் உறுதிப்பட்டு வருகிறது. எத்தனையோ உலகளாவிய அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல்நிலை வெற்றியாளராய் உயர்ந்து வருகின்றனர். இவற்றை எல்லாம் மிகப்பலர் கண்டுகொள்வதில்லை; மதிப்பதில்லை, இந்த வெற்றிகளெல்லாம் எப்படி வந்தன? இந்த நிலையை அடைய ஆசிரியர்கள் எப்பாடுபட்டிருப்பர். அவர்களைப் போற்றும் மனமில்லை எனில் தாழ்வில்லை. குறைத்து மதிப்பிடுதல் கூடாது.
இன்று பல்கலைக்குச் செல்லும் மாணவர்களில் எத்தனை பேர் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர்கள் என்று கணக்கிட்டால் உண்மை விளங்கும். மருத்துவர்களாக பொறியாளராக, கணக்கியல் பட்டதாரிகளாக இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலைக்கெல்லாம் அடிப்படை போட்டுவருபவர்கள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே. இவற்றை யெல்லாம் மறந்துவிட்டு, ஆறாம் ஆண்டுத் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடத்தில் தந்தை பெரியார் பற்றி இரண்டுபத்தியளவே வந்துள்ள சிறு குறிப்புகளைப் பெரிதுபடுத்தி அதனை விவாதப் பொருளாக்குவது வேடிக்கையாக இருக்கிறது. அந்தப் பாடச்செய்தி பலமுறை பல ஏடுகளில் வந்து விட்டதால் மீண்டும் அதனை இங்கு வெளியிட்டு இடத்தை அடைக்கத் தேவையில்லை அதனைப் பலரும் அறிவர்.
நிகண்டை மட்டுமே வைத்துக் கொண்டிருந்த தமிழர்களுக்குச் சதுரகராதியைத் தந்து, அகரமுதலிகள் பெருக்கத்திற்கு அடிப்படை போட்டுத்தந்த வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கிபற்றியும் எழுதப்பெற்றுள்ளது. அவர் கிறித்துவர் என்று மதப்பார்வையொடு நோக்குவது குறுகிய மனப்பான்மை அன்றோ? அருள்தந்தையராய்த் தமிழகத்திற்கு வந்து கால்பதித்து ஆழ்ந்து தமிழ்கற்றுப் புலமை பெற்றவர்கள்தாம், திருக்குறள் திருவாசகம் போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மேலை நாடுகளில் பரப்பினர். தமிழ் இன்று உலகில் செம்மொழியானதற்கு அப்பெருமக்கள் ஆற்றிய தொண்டும் காரணமென்பதனை மறந்திடலாமா..
புத்தர் இறைமறுப்பாளரே, அவர் பெயரில் உள்ள சமயத்தைத் தழுவோர் நிரம்ப உளர். அவரைப்பற்றியெல்லாம் படிக்கும் மாணவர் ‘நாத்திகர்’ ஆய்விடுவர் என்று எண்ணலாமா?
பாரதியார் பாட்டில்……
“செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்று எண்ணி இருப்பவர்
பித்த மனிதர் அவர்சொல்லும் சாத்திரம்
பேய்உரை யாம் என்று இங்கு ஊதேடா சங்கம்”
என்று மதக்கருத்துகளைச் சாடுவதால், பாரதி பாட்டை மாணவர்கள் பாடக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டுமென்று சொல்லலாமா?
“கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்” என்று ஒரு பழமொழி தமிழில் உள்ளது. அந்தப் பழமொழியே தப்பானது என்றுகூறி அதனைத் தடை செய்ய முயலப் போகிறார்களா?
இங்குப் பயன்பாட்டில் உள்ள காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண மதத்தை முதன்மைபடுத்துவது; மணிமேகலை பௌத்த காப்பியம். இந்த இருகாப்பியங்களையும் மாணவர்கள் படிக்கக் கூடாது என்று தடை செய்ய எண்ணலாமா?
தமிழ்ப்பாடத் திட்டக் குழுவில் இந்து சமயப் பேராளர் ஒருவர் தேவை என்ற குரல் எழுப்பப்பட்டுள்ளது.. இங்கு வாழும் தமிழர் – இந்தியர் அனைவரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களா? பள்ளிமாணவர்களில், ஆசிரியர்களில் கிறித்துவர்களோ, இசுலாம் சமயம் சார்தவர்களோ இல்லையா?
இங்கு ஒன்றனை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழ் என்பது இந்து சமயத்துக்கு மட்டும் (Bahasa Hindu) சொந்தமானதன்று. கிறித்துவ, இசுலாமியத் தமிழர்களுக்கும் அது தாய்மொழி என்பதனை மறந்து விடுதல் கூடாது. கிறித்துவர்களுக்குத் தேம்பாவணி உண்டு; இசுலாமியர்க்குச் சீறாப்புராணம் உண்டு. சைவ, வைணவப் பனுவல்கள் நிரம்ப உள. தமிழ் எத்தனையோ செல்வங்களை உள்ளடக்கியமொழி. அதனில் பயிற்சி இல்லார் வெறுமனே ஒருசார்பாக நின்று கருத்துரைத்தல் கூடாது.
மலேசியத் தமிழ்க் கல்வித்துறையின் இருநூறுஆண்டு கால வரலாற்றில் ஏற்பட்டிராத சிக்கல், இப்பொழுது ஏன் ஏற்பட்டதென்று தெரியவில்லை. இது நீளக்கூடாது என்பதே நம் எண்ணம்.
இடைவந்த சிக்கல்கள் இல்லாமல் போகட்டும்! தமிழ்ப்பள்ளிகள் ஓங்கட்டும்!
தமிழாசிரியர்களின் தொண்டு சிறக்கட்டும்! தமிழ்க் கல்வித்துறை தெளிந்த நீரோடையாகட்டும்!
“தமிழெங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நற் றொண்டு”
– பாவேந்தர் பாரதிதாசன்