கோலாலம்பூர்: வாரிசான் கட்சியும், முடாவும் 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சாத்தியமான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சபாவை தளமாகக் கொண்ட கட்சி தீபகற்ப மலேசியாவிலும் விரிவாக்க உதவுவதற்கான முடாவின் திட்டமாக இது இருக்கும் என்று மலேசியா இன்சைட் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் சங்கப் பதிவாளர் முடாவை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சியை நிராகரித்தது.
முடாவின் இணை நிறுவனர் முத்தாலிப் உத்மான், வாரிசான் உயர்மட்ட தலைவர்களுடன் இயங்கலை சந்திப்புகள் இந்த வாரம் நடைபெற்றதாகக் கூறினார்.
“கட்சி (வாரிசான்) ஒரு தேசிய கட்சியாக மாறுவதற்கும், தீபகற்ப மலேசியாவிற்கு பரப்புவதற்கும் நாங்கள் வாரிசானுடன் கலந்துரையாடி வருகிறோம். எங்களிடம் இன்னும் முறையான ஒப்பந்தம் இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பொதுவான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள்,” என்று அவர் செய்தி தளத்திடம் கூறினார்.
முடா தலைவர் சைட் சாதிக் மற்றும் வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் தனிப்பட்ட கலந்துரையாடல்களில் இணையவில்லை. முடா தான் வாரிசானிடம் பேசியது என்றும் அவர் கூறினார்.