கோலாலம்பூர்: அண்மையில் நோன்பு இருந்ததற்காக முதலாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தொழிலாளர்கள் பிரச்சனையைத் தொடர்ந்து கிள்ளான் பகுதி தேசிய கூட்டணி இன்று காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தது.
கிள்ளான் பெர்சாத்து இளைஞர் தகவல் தலைவர் முகமட் பிர்டாவுஸ் கான் முகமட் உஸ்மான் இன்று பிற்பகல் காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார்.
முழுமையான விசாரணை நடத்தவும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் முதலாளிக்கு தகுந்த தண்டனை வழங்கவும் அதிகாரிகளை வலியுறுத்துவதாக அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
“விசாரணையை கண்காணிக்கவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும், காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய கூட்டணி பிற தலைவர்களான டி. நல்லன் மற்றும் ரோஜர் டான் ஆகியோர் அவருடன் கலந்து கொண்டனர்.
இந்த வழக்கை முழுமையாகவும் உடனடியாகவும் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்க விரைவில் தனது தரப்பு மனிதவள அமைச்சகத்துடன் சந்திப்பை நடத்தும் என்று முகமட் மேலும் கூறினார்.
மேலும் பேசிய முகமட், மக்கள் இந்த விவகாரத்தை ஒரு இனப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இது ஒரு சில நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமே என்று அவர் கூறினார்.