காசா : இஸ்ரேலுக்கும், ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. காசா நகர் பகுதியைத் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த மோதல்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும் வீதிகளில் வெளியே வந்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கார்கள் ஓட்டிச் செல்பவர்கள் ஒலியெழுப்பினர். ஒரு சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மே 10-ஆம் தொடங்கிய இந்த மோதல்களை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் எகிப்து ஈடுபட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார்.
பாலஸ்தீனத்தில் இயங்கிவரும் ஹாமாஸ் இயக்கமும், இஸ்லாமிக் ஜிஹாட் இயக்கமும் போர்நிறுத்தத்தை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த சில நாட்களில் ஹாமாஸ் ஏவிய ஏவுகணைகள் தாக்குதலால் 12 பேர் மரணமடைந்தனர். இவர்களில் இந்தியர் ஒருவரும் இரண்டு தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இதுவரையில் 232 பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர். மேலும் 1,900 பேர் காயமடைந்தனர்.
கடந்த புதன்கிழமை (மே 19) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய தொலைபேசி அழைப்பில், போர் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியிருந்தார்.