உலகின் 25 விழுக்காட்டு மக்கள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள கெவின் ரூத் “கொவிட் பரவியபோது தனது நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசிகளை போட வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணாமல் இந்தியா தான் தயாரித்த தடுப்பூசிகளில் 66 மில்லியன் அளவைகளை (டோஸ்) 95 நாடுகளுக்கு அனுப்பி வைத்து உதவியது. எனவே, இப்போது இந்தியாவுக்கு நாம் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சமயமாகும்” என கெவின் ரூத் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் தொற்றுப் பரவல் பாதிப்பு அண்டை நாடுகளுக்கும் பரவியிருப்பதை கெவின் ரூத் சுட்டிக் காட்டியுள்ளார். உதாரணமாக, நேப்பாளத்தில் இருவரில் ஒருவருக்கு கொவிட் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்த நாடு தடுப்பூசிகளைப் பெறுவதற்கும் உயிர்வளி (ஆக்சிஜன்) விநியோகத்தைப் பெறுவதற்கும் முழுக்க முழுக்க இந்தியாவையே நம்பியிருக்கிறது என்றும் கெவின் ரூத் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு உதவுவது என்பது சரியான ஒரு நடவடிக்கை மட்டுமல்ல, மாறாக நமது சொந்த நலன்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு நகர்வாகும். காரணம் கொரொனா நச்சுயிரி எங்கிருந்து பரவினாலும், அந்த நச்சுயிரி திரிபு கண்டு பரவினால் அதனால் நம் அனைவருக்கும் ஆபத்துதான் என்பதை உணரவேண்டும் என்றும் கெவின் ரூத் கூறியுள்ளார்.
“தற்போது உலகை உலுக்கி வரும் கொவிட்-19 தாக்கத்தையும், சவால்களையும் எதிர்நோக்க வேண்டியது நமது தலைமுறையின் கடமையாகும். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலங்களில் சிறியதும் பெரிதுமான பல சவால்களைக் கடந்து வந்திருக்கிறது. இப்போது நாம் எதிர்நோக்கும் கொவிட் பாதிப்பு நமது தலைமுறை எதிர்த்து சமாளிக்க வேண்டியதாகும்” எனவும் கெவின் ரூத் தனது அறிக்கையில் தெரிவித்தார்.