கோலாலம்பூர்: கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்மானித்தபடி உள்நாட்டு வருமான வரித்துறைக்கு 1.69 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக தமக்கு எதிரான திவால் அறிவிப்பை இரத்து செய்ய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பித்திருந்தார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, பிப்ரவரி 4 தேதியிட்ட வருமான வரித்துறை வழங்கிய கடிதம் தீங்கிழைக்கும், அடக்குமுறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை துஷ்பிரயோகம் செய்தது என்ற அடிப்படையில் நஜிப் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
இந்த அறிவிப்பு தனது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஓர் அரசியல் சதி தந்திரம் என்றும் அவர் கூறினார்.
ஜூன் 2019-இல், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப்பிடமிருந்து 1.69 பில்லியனுக்கும் அதிகமான தொகையை கோருவதற்காக வருமான வரித்துறை மூலம் அரசாங்கம் நஜிப் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தது.
மதிப்பீட்டு அறிவிப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், நஜிப் 2011 முதல் 2017 வரையிலான வருமான வரி செலுத்த தவறியதாக அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கடனின் அளவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.