ரோம் : கடந்தாண்டு 2020-இல் நடைபெறவேண்டிய ஈரோ 2020 என்ற ஐரோப்பியக் கிண்ணத்திற்கான 16-வது காற்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
முதல் ஆட்டத்தில் இத்தாலியும், துருக்கியும் மோதுகின்றன. மலேசிய நேரப்படி நாளை சனிக்கிழமை (12 ஜூன்) அதிகாலை 3.00 மணிக்கு இந்த ஆட்டம் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் இந்தப் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.
மேலும் முதல் முறையாக யுஎச்டி (UHD) எனப்படும் அதிதுல்லிய ஒளிபரப்பில் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை ஆஸ்ட்ரோ நேரலையாக ஒளிபரப்புகிறது.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளாகும்.
கடந்தாண்டு கொவிட்-19 தொற்றுகளால் ஒத்தி வைக்கப்பட்ட இந்தப் போட்டிகள் ஐரோப்பா முழுவதும் மொத்தம் 13 நகர்களில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த நகர்களின் எண்ணிக்கை 11 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை இழந்த இரண்டு நகர்கள் அயர்லாந்தின் டப்ளின் நகரும் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரும் ஆகும்.
காற்பந்து போட்டிக்கான விளையாட்டு மைதான அரங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்காததால் பிரசல்ஸ் அந்த 13 நகர்களில் ஒன்றாக போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழந்தது.
காற்பந்து போட்டிக்கான பார்வையாளர்களை அனுமதிக்கும் உறுதிமொழியை வழங்காத காரணத்தால் டப்ளின் போட்டிகளில் ஒன்றை நடத்தும் வாய்ப்பை இழந்தது.
அதைத் தொடர்ந்து மொத்தம் 11 நகர்களில் இந்தக் காற்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
போட்டிகள் இந்த ஆண்டு நடத்தப்பட்டாலும், ஈரோ 2020 என்றே இந்தக் காற்பந்து போட்டிகள் அழைக்கப்படுகின்றன.
எதிர்வரும் 11 ஜூலை 2021 வரை இந்தக் காற்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐரோப்பியக் கிண்ணத்திற்கான போட்டிகள் தொடங்கி 60 ஆண்டுகள் கடந்திருப்பதால் இந்த முறை நடத்தப்படும் போட்டிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக UEFA எனப்படும் யூனியன் ஆப் ஈரோப்பியன் புட்பால் அசோசியேஷன்ஸ் (Union of European Football associations) அமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி தெரிவித்தார்.
இந்த அமைப்புதான் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளையும் நடத்துகிறது. அதன் தலைவராக இருக்கும் மைக்கல் பிளாட்டினி பிரான்ஸ் நாட்டின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளருமாவார்.
கடந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள் 2016-இல் நடைபெற்றன. அப்போது ஐரோப்பியக் கிண்ண வெற்றியாளராக போர்ச்சுகல் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் குழுவில் தொடர்ந்து இந்த முறையும் உலகின் முதல் நிலை விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவதால் மீண்டும் போர்ச்சுகல் கிண்ணத்தைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் காற்பந்து இரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
இந்த முறை நடைபெறும் காற்பந்து போட்டிகளில் காணொலி (வீடியோ) மூலம் போட்டி நடுவர் இறுதி முடிவை செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.