Home Photo News நஸ்ரி அசிஸ் : சர்ச்சை – துணிச்சல் – போர்க்குணம் – நிறைந்த அரசியல்வாதி

நஸ்ரி அசிஸ் : சர்ச்சை – துணிச்சல் – போர்க்குணம் – நிறைந்த அரசியல்வாதி

644
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்” என்ற அறிவிப்பு ஒரு சிலருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அரசியல் பார்வையாளர்களோ அதை ஒரு வெற்றிடமாகத்தான் பார்ப்பார்கள், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு!

அந்த அளவுக்கு கடந்த பல ஆண்டுகளாக, அமைச்சராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருபவராகவும் திகழ்ந்தவர் நஸ்ரி அசிஸ். மலேசிய அரசியல் களத்தை தனது அனல் பறக்கும் அறிக்கைகளால் அடிக்கடி ஆக்கிரமித்தவர்.

அம்னோ அரசியலில் சர்ச்சைக்குரிய, துணிச்சலானக் கருத்துகளை வெளியிட்டு வந்த தலைவர்களில் ஒருவர் நஸ்ரி அசிஸ். பேராக் மாநிலத்தின், பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர்.

#TamilSchoolmychoice

இந்த முறை நாடாளுமன்றத் தொகுதிக்கான தவணைக்காலம் முடிவடையும்போது அத்துடன் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார் நஸ்ரி அசிஸ்.

பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதியின் தலைவராகவும் அடுத்த கட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என 67 வயதான நஸ்ரி அசிஸ் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே அம்னோவின் சார்பில் அமைச்சராகப் பல தவணைகள் இருந்தவர் நஸ்ரி அசிஸ்.

அம்னோவைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் பிரதமராகக் காணும் தனது கனவு சாத்தியமாகிவிட்டதால் அந்த மகிழ்ச்சியோடு பதவி விலகுவதாக நஸ்ரி அசிஸ் கூறியிருக்கிறார்.

இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வு பெறுவதில் கடுமையாகப் பாடுபட்டவர்களில், குரல் கொடுத்தவர்களில் நஸ்ரி அசிஸ் முக்கியமானவராவார்.

நஸ்ரியின் கடந்த கால சர்ச்சைகள்

துன் மகாதீரோடு பலமுறை பகிரங்கமாக மோதியவர் நஸ்ரி அசிஸ். அதே வேளையில் அன்வாருக்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருந்தவர்.

14-வது பொதுத் தேர்தலில் அவர் சீன சமூகத்திற்கு எதிராக விடுத்த கருத்துகளும், குறிப்பாக மலேசியாவின் முதலாவது பணக்காரர் ரோபர்ட் குவோக்குக்கு எதிராகக் கூறிய தகாத வார்த்தைகள் கொண்ட தாக்குதல்களும் சீன சமூகத்தின் வாக்குகளையே கணிசமாக தேசிய முன்னணிக்கு எதிராகத் திருப்பின எனலாம்.

அண்மையில் நஜிப் துன் ரசாக்கையும் அவர் தகாத வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.

இஸ்மாயில் சாப்ரி பிரதமராகத் தேர்வு பெறுவதில் பின்னணியில் முக்கியப் பங்காற்றினார். இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவையில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கூட நிலவியது.

நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும், அம்னோவிலும், அரசியல் கருத்துகளை வெளியிடுவதிலும் அவர் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவார் என எதிர்பார்க்கலாம்.

அவரின் கடந்த கால சேவைகளுக்காக, அவருக்கு அரசாங்க அமைப்பு ஒன்றில் முக்கியப் பதவி வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை – அம்னோ, தேசிய முன்னணியின் ஆட்சி தொடருமானால்!

-இரா.முத்தரசன்


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal