(இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை நியமனங்கள் வருகிற 15-ஆவது பொதுத் தேர்தலுக்கான வியூகமா? என்ற கோணத்தில் தனது அரசியல் கண்ணோட்டத்தை வழங்குகிறார் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)
இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவையில் எவ்விதப் பெரிய மாற்றங்களும் காணப்படவில்லை. மாறாக ஒரு சில அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர். முந்தைய அமைச்சர்கள் ஒரு சிலர் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் புதிய அமைச்சரவையில் 31 முழு அமைச்சர்களும் 38 துணையமைச்சர்களுமாக மொத்தம் 69 பேர் இடம் பெற்றுள்ளனர். இவரின் அமைச்சரவையில் துணைப் பிரதமர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த முடிவு ஓர் அரசியல் சாணக்கிய முடிவு எனலாம்.
இந்த எண்ணிக்கை முந்தைய தேசிய முன்னணி, பக்காத்தான் ஹரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணி, பெரிக்கத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணி அரசாங்கங்களில் காணப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கைக்கு ஈடாகத்தான் காணப்படுகிறது.
நாடு எதிர்நோக்குகின்ற கோவிட் பெருந்தொற்றிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தேசிய தடுப்பூசித் திட்டத்திற்குப் பொறுப்பாளராக இருந்த கைரி ஜமாலுடினைச் சுகாதார அமைச்சராக நியமித்ததை முக்கிய அமைச்சரவை மாற்றமாகக் குறிப்பிடலாம்.
கைரி ஜமாலுடினின் ஆக்ககரமான தலைமையில் நாட்டில் இன்று 60% மக்களுக்கு முழுமையாகத் தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது. இச்சாதனையைக் கைரி தொடர வேண்டும் எனும் நோக்கத்திலேயேதான் அவருக்குச் சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, மனித வள அமைச்சராக இருந்த டத்தோஶ்ரீ மு.சரவணனுக்கு மீண்டும் மனித வள அமைச்சே வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மனிதவள அமைச்சில் மக்களின் தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அவ்வமைச்சுக்குத் தொழிற்துறை வர்த்தகர்களின் பாராட்டை ஈட்டித் தந்தது.
ஆகவே, அப்பணியைத் தொடர்ந்து திறம்பட செய்ய அவரை மீண்டும் மனிதவள அமைச்சராகவே நியமித்துள்ளார் இஸ்மாயில் சாப்ரி.
இதற்கிடையே, சிறு தொழில் சமூக,சமயத் துறைகளில் இந்தியர்களுக்கு உதவுவதற்கு அமைக்கப்பட்ட மித்ரா இலாகாவை உள்ளடக்கிய ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மீண்டும் டத்தோ அலிமா முகமது சடிக் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தகவல் பல்லூடக அமைச்சின் புதிய அமைச்சராக டான்ஶ்ரீ அனுவார் மூசா நியமிக்கப்பட்டுள்ளார்.தகவல் பல்லூடக அமைச்சு அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்ற முக்கிய அமைச்சாகும்.
அரசாங்கத்தின் செயல் திட்டங்களை அவ்வப்போது மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மக்களின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும், ஆதரவு, அதிருப்தி மற்றும் எதிர்ப்பு போன்றவற்றைக் கணித்து அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வதுதான் இவ்வமைச்சின் தலையாய பணியாகும்.
இடைக்காலத்தில் சமூக ஊடகங்கள் மேலோங்கி, இவ்வமைச்சுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு கூட்டரசு அமைச்சுக்கு அமைச்சராகச் செயல்பட்ட அனுவார் மூசா இவ்வமைச்சுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனென்றால் மக்கள் அமைச்சை நாடிப் போவதைவிட அமைச்சு மக்களை நாடிச் சென்ற நடைமுறையை முன்னெடுத்துச் செயல்படுத்தி வெற்றியும் கண்டவர் அனுவார் மூசா எனலாம்.
ஆகவே, இவருடைய அனுபவமும் மக்கள் நலன் கருதும் சிந்தனையும் தகவல் பல்லூடக அமைச்சின் செயல்பாடுகளை மக்களுக்குத் தடையின்றி கொண்டுச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.
நாட்டின் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கிடையே இஸ்மாயில் சப்ரி யாகோப் அமைத்த இப்புதிய அமைச்சரவையிலே அம்னோ கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் புதிதாக இடம் பெற்றிருக்கின்றனர்.
முன்பு பெர்சத்து அமைச்சர்களிடமிருந்த மலாய் சமூக கிராம மேம்பாட்டுத் தொழில் வளர்ச்சி அமைச்சுகள் அம்னோ அமைச்சர்களுக்குக் கை மாறியது கவனிக்கப்பட வேண்டியதாகும். இருப்பினும், இஸ்மாயில் சாப்ரியின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்க அடித்தளமாக இருந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விழுக்காட்டை மையமாக வைத்துத்தான் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முந்திய பெரிக்கத்தான் நேஷனல் அரசங்கம் தற்போது, பெரிக்கத்தான் நேஷனல் -தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கமாக உருமாறியுள்ளது.இருப்பினும், இப்புதிய அமைச்சரவையில் அம்னோவின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதைக் காட்டுகிறது . இந்த அமைச்சரவையிலே மீண்டும் அம்னோவின் ஆதிக்கம் தலைத் தூக்குவதைக் காணலாம்.
இது வருகிற 15 ஆவது பொதுத் தேர்தலின் வியூகமோ?
எவ்வாறாயினும் இப்புதிய அமைச்சரவை நாடு எதிர்நோக்குகின்ற கோவிட் 19 பெருந்தொற்றைத் துடைத்தொழிப்பதிலும், சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்வதிலும் முனைப்புக் காட்டுவதோடு மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்குமென மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
– டத்தோ மு.பெரியசாமி
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal