Home நாடு பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் இணக்கம்

பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் இணக்கம்

1327
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : பிரதமர் முன்மொழிந்திருக்கும் நாடாளுமன்ற, சட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்காக, மக்களின் நலன்களை முன்னிறுத்தி பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இணக்கம் தெரிவித்திருக்கிறது.

நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) மாலை பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் மன்றத்தின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் இஸ்மாயில் சாப்ரி முன்வைத்த சீர்திருத்தங்களை, மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு ஏற்றுக் கொண்டு செயல்படுத்த அவருடன் கைகோர்க்க முன்வருவதாக அந்தக் கூட்டத்திற்கு பின்னர் விடுத்த அறிக்கையில் பக்காத்தான் ஹாரப்பான் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம், முகமட் சாபு, லிம் குவான் எங் ஆகிய மூன்று பக்காத்தான் தலைவர்களும் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

எனினும் முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மெருகேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான சட்டவரைவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காகத் தாங்கள் பாடுபடப் போவதாகவும் பக்காத்தான் ஹாரப்பான் அறிவித்திருக்கிறது.

இஸ்மாயில் சாப்ரி முன்தொழிந்த 7 சீர்திருத்தங்கள் என்ன?

7 நாடாளுமன்ற, சட்ட, சீர்திருத்தங்களைக் கொண்டு வர இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

அவை பின்வருமாறு:

1. கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது

2. வாக்களிக்கும் வயதை 21-இலிருந்து 18-ஆகக் குறைக்கும் வகையில் மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது.

3. பிரதமர் பதவி வகிக்கும் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வருவது.

4. நாடாளுமன்ற சிறப்பு செயற்குழுக்களில் எதிர்கட்சி உறுப்பினர்களும், அரசாங்க அமைச்சுப் பொறுப்புகள் வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களும் (backbenchers) சரி சம அளவிலான எண்ணிக்கையில் இடம் பெறுவதை உறுதி செய்வது.

5. எல்லா சட்டத் திருத்தங்களும், புதிய சட்டங்களும், முதலில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி தரப்பினரிடையே கலந்தாலோசிக்கப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டு, அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

6. எதிர்கட்சி அரசியல்வாதிகள் தேசிய மீட்சித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு, மேம்படுத்துதலுக்காக அவர்கள் வழங்கும் கருத்துகளும் ஆலோசனைகளும், சேர்த்துக் கொள்ளப்படும்.

7. எதிர்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளும் ஓர் அமைச்சருக்கு வழங்கப்படுவதற்கு நிகரானதாகத் திகழும்.

இந்த 7 சீர்திருத்தங்களும் எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே திருத்தங்களாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் கூடுதலான சீர்திருத்தங்கள் தேவை – லிம் குவான் எங் கோரிக்கை

நேற்றைய அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக, இஸ்மாயில் சாப்ரி முன்மொழிந்திருக்கும் சீர்திருத்தங்கள் குறித்துக் கருத்துரைத்திருந்த, ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்த சீர்திருத்தங்கள் போதுமானதாக இல்லை எனக் குறை கூறியிருக்கிறார்

தோல்வியடைந்த முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் முன்மொழிந்த சீர்திருத்தங்களையே மீண்டும் இஸ்மாயில் சாப்ரி பரிந்துரைத்திருக்கிறார். அதைவிடக் கூடுதலான சீர்திருத்தங்களை இஸ்மாயில் சாப்ரி கொண்டு வர வேண்டும் என்றும் லிம் குவான் எங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal