Home Photo News அரசாங்கம் – எதிர்கட்சிகள் ஒப்பந்தம் – இந்தியர்களுக்குப் பயன் என்ன? – டத்தோ பெரியசாமி கண்ணோட்டம்

அரசாங்கம் – எதிர்கட்சிகள் ஒப்பந்தம் – இந்தியர்களுக்குப் பயன் என்ன? – டத்தோ பெரியசாமி கண்ணோட்டம்

1000
0
SHARE
Ad

(அண்மையில் ஆளும் அரசாங்கத்திற்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்தியர்கள் ஏதும் பயனடைவார்களா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கின்றார், முன்னாள் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

14-ஆவது நாடாளுமன்றத் தொடரில் 4-ஆவது அவைன்போது நாடாளுமன்ற வளாகத்தில் அரசாங்கமும் எதிர் கட்சிகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் வழி அரசாங்கமும் எதிர்கட்சிகளும் ஒருமுகமாக நாட்டின் பொருளாதார மீட்புப் பணிகளையும் கோவிட் 19 தொற்றின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புத் தர இணக்கம் கண்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையென்று கூறலாம்.

#TamilSchoolmychoice

ஆனால், இந்தப் புதிய திருப்பத்தினால் இந்திய சமூகம் பயனடைவார்களா?

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

இப்போது நாடு 12-ஆவது மலேசிய ஐந்தாண்டுத் திட்டத்தை (RANCANGAN MALAYSIA KE 12 ) உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மலேசியத் திட்டம்தான் வரும் 5 ஆண்டுகளுக்கான நமது நாட்டு மக்களின் மேம்பாட்டுத் திட்டத்தை உள்ளடக்கியிருக்கும் ஒரு செயல்திட்ட ஆவணமாகும். இந்த ஆவணத்தில் இந்தியர்களுக்கான மேம்பாடு பற்றிக் குறிப்பிட்டிருந்தால்தான் அந்த மேம்பாட்டுக்கான நிதி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும்.

அப்போதுதான் அத்திட்டம் தங்குதடையின்றி செயலாக்கம் பெற அரசு அதிகாரிகளும் முயற்சி செய்வர்.

எடுத்துக்காட்டாக, 1973 ஆம் ஆண்டு வாக்கில் அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையில் 2 ஆவது மலேசியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தில் தோட்டத் தொழிலாளர் சொந்த வீட்டுடமைத் திட்டம் வரைறுக்கப்பட்டிருந்தது.

அமரர் டத்தோ கு.பத்மநாபன்

இத்திட்டத்தைத் தயாரிப்பதற்குப் பிரதமர் இலாகாவில், பொருளாதாரப் பிரிவில் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றிய டத்தோ கு. பத்மநாபன் பெரும்பங்காற்றினார்.  இத்திட்டம் நாட்டிலுள்ள 21 தோட்டங்களில் செயல் வடிவம் பெற்றதென அறிக்கைகள் கூறுகின்றன. அதற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 5-ஆண்டு மலேசியத் திட்டங்களில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தெளிவாக வரையப்படவில்லை எனலாம்.

இருப்பினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10-ஆவது மலேசிய 5 ஆண்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான சொந்த வீட்டுடமைத் திட்டம் (SKIM KHAS PEMBIAYAAN RUMAH PEKERJA ESTET – SKRE) மீண்டும் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கு 50 மில்லியன் சுழல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்படாமலேயே போய் விட்டது எனலாம்.

ஆகவே,நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்கள் தொடர்ந்து விடுபடாமலிருக்க அவர்களின் மேம்பாட்டிற்காக ஒரு விசேஷ 10 ஆண்டு இந்திய மேம்பாட்டுத் திட்டம் ம.இ.கா.வின் தலைவராக இருந்த டத்தோ ஶ்ரீ டாக்டர் ச. சுப்ரமணியத்தின் தலைமையில் ( INDIAN BLUE PRINT ) முழுமூச்சாக தயாரிக்கப்பட்டு 23.4.2017 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாகப் பிரதமர் நஜிப் துன் அப்துல் ரசாக்கால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தினை பொறுப்புடன் நிறைவேற்ற 27.10.2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த வரவு செலவு விவாதத்தில் அப்போதைய பிரதமர் நஜிப் துன் அப்துல் ரசாக் சமர்ப்பித்தார்.

இத்திட்டம் அறிவிக்கும் போது 11-ஆவது மலேசிய ஐந்தாண்டுத் திட்டம் (2016 – 2020) ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டதால் வருகின்ற 12-ஆவது மலேசிய ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்காக வரையப்பட்ட இந்த புளு பிரிண்ட் திட்டம் சேர்த்துக் கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், இத்திட்டத்திற்கு உயிரூட்டும் வகையிலே அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் பல திட்டங்களை செயல்படுத்தினார். அதிலே இந்தியர்களின் நிதி பங்குடமையை உயர்த்துவதற்கு 1.5 பில்லியன் மதிப்புடைய தேசிய முதலீட்டுக் கழகம் – PNB-யின் (PERMODALAN NASIONAL BERHAD) பங்குகளை AMANAH SAHAM SATU MALAYSIA என்ற பெயரில் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.

ஆகவே, புளுபிரிண்ட் என்பது வெட்டிப் பேச்சல்ல. இது உண்மையான இந்நாட்டு இந்தியர்களின் மேம்பாட்டுக்கான செயல் திட்டமாகும். ஆகவே, 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான மேம்பாட்டுத்திட்டம் அவசியம் இணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் போதிய நிதியும் ஒதுக்கப்பட்டு மேம்பாட்டுத் திட்டமும் செயல் வடிவம் பெறும்.

ஆகவே,நமது அரசியல் மேடையில் எதிரும் புதிருமாக இருந்த ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் மேம்பாட்டுக்குச் செயல்பட இணைந்துவிட்ட வேளையில் இந்நாட்டிலே செயல்படுகின்ற அனைத்து இந்திய அரசியல் தலைவைர்களும் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக ஒரு முகமாக இணைந்து இந்திய சமூகத்தின் மேம்பாட்டை உருவமைக்க செயல்பட முன்வருவார்களா?

-டத்தோ மு.பெரியசாமி


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal