Home Photo News “12-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது?” டத்தோ பெரியசாமி கண்ணோட்டம்

“12-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது?” டத்தோ பெரியசாமி கண்ணோட்டம்

605
0
SHARE
Ad

(கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி சமர்ப்பித்த 12-வது மலேசியத் திட்டம் சர்ச்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருசேர ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சமூகம் பெரிதும் எதிர்பார்த்த12-வது மலேசியத்திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன இருக்கிறது? தனது கண்ணோட்டத்தை வழங்குகிறார் முன்னாள் பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின் இயக்குனரும் அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி)

12ஆவது மலேசிய ஐந்தாண்டுத் திட்டத்தை (2021-2025) பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாகோப் செப்டம்பர் 27-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இத்திட்டத்தில் உள்ளடங்கிய மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தச் செலவு 400 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது. இத்தொகை 11-ஆவது ஐந்தாண்டு மலேசியத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 260 பில்லியனைவிட பன்மடங்கு அதிகமாகும்.

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி
#TamilSchoolmychoice

நாடு வருவாய் சவாலை எதிர்நோக்கி வந்தாலும் , கோவிட் 19 பெருந்தொற்று நோயினால் நலிவுற்றிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மறுசீர் செய்வதற்கும், சிரமப்படும் மக்களுக்கும் உதவும் வகையிலும் இத்திட்டம் வரையப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவடையும்போது மலேசியர்களின் குடும்பச் சராசரி வருமானம் 10,000 ரிங்கிட்டாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 12-ஆவது ஐந்தாண்டு மலேசியத் திட்டம், ஒன்பது துறைகளில் கவனம் செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலங்களுக்கிடையில் காணப்படும் மேம்பாட்டு இடைவெளியையும்,பல்வேறு இனங்களுக்கிடையே காணப்படும் வருமான இடைவெளியையும் குறைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு அடிப்படைத் தாரக மந்திரம் அனைத்து இனங்களின் மேம்பாடுகளை உள்ளடக்கிய ( inclusif ) மேம்பாட்டுத் திட்டமாக இருந்தாலும், மலாய் சமூகத்தின் முன்னேற்றத்தையும் சபா,சரவாக் மாநிலங்களிலுள்ள பல்வேறு பூமிபுத்ரா சமூகத்தின் முன்னேற்றத்தையும் இத்திட்டம் முன்னெடுக்குமெனத் தெளிவாக வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக மலாய்க்காரர்களின் சொத்துடமை அளவை 17.2% -க்குக் குறையாமலும் மேலும் உயர்த்தவும் முயற்சிகள் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முன்னெடுப்பு நாட்டின் கூட்டரசு சாசனம் பிரிவு 153 அடிப்படையில்தான் நடைமுறை படுத்தப்படுகிறதென பிரதமர் விளக்கமளித்தார்.

இருப்பினும், புதுக்கிராமங்களில் வாழும் சீனச் சமூகத்தின் மேம்பாட்டுக்கும், இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கும் இத்திட்டம் கவனம் செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 11-ஆவது மலேசியத் திட்டத்திலே இடம்பெறாமல் விடுபட்டுப்போன மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுத்திட்டம் (Pelan Tindakan Masyarakat India – MIB) சேர்த்துக் கொள்ளப்படுமென்ற அறிவிப்பு செய்தது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இந்த இந்திய மேம்பாட்டுத் திட்டத்தினை(BLUE PRINT- MIB) ம.இ.கா. முழுமூச்சுடன் தயாரித்து முந்தைய அரசங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இத்திட்டம் 12-ஆவது ஐந்தாண்டு மலேசியத் திட்டத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த இப்போதைய ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில்தான் இத்திட்டம் செயல் வடிவம் காணப்போவது ஒரு மகிழ்ச்சியான செய்தியும் ம.இ.காவுக்கு ஓர் அங்கீகாரமுமாகும்.

இதற்கிடையே, பொதுச் சேவைத் துறையில் தேசிய, மாநில, வட்டார அளவிலே அதிகாரிகளை நியமித்து, வறுமைக் கோட்டில் வாழ்கின்ற மக்களின் விபரங்களைக் கண்டறிந்து, அதனைத் தரவாகப் (data bank) பதிவு செய்யவிருப்பதை இந்தியர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும்.

காரணம், இந்த அதிகாரிகள் சேகரிக்கும் விபரங்களின் அடிப்படையில்தான் அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குப் பணவுதவி செய்யும் திட்டம் தங்குதடையின்றி சென்றடைய உதவி புரியும். ஆகவே, அரசாங்கப் பணவுதவித் திட்டத்தில் விடுபடாமலிருக்க இப்பதிவில் அவசியம் இந்தியர்கள் இடம்பெறுவதை அரசியல் சமூகத் தலைவர்கள் கவனிக்க வேண்டும்.

12-ஆவது ஐந்தாண்டு மலேசியத் திட்டத்தில் அடங்கியுள்ள அனைத்துத் திட்டங்களும் வெறும் அலங்கார வார்த்தைகளாக இல்லாமல் உண்மையாக செயல்வடிவம் பெற அரசாங்க இலாகாக்கள் இன வேறுபாடின்றி முன்னெடுக்க வேண்டும்.

இந்தியர்களுக்கான மேம்பாட்டுத்திட்டம் செயல்வடிவம் பெறுவதைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைச்சரவைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவிலே ம.இ.காவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இடம்பெறுவது அவசியம். இதன் அடிப்படையில் 12-ஆவது மலேசியத் திட்டத்திலே இந்தியர்களுக்கெனக் குறிப்பிடப்பட்டத் திட்டங்களை அரசாங்க இலாகாக்கள் முறையாகச் செயல்படுத்துகிறதா என்பதை உறுதிசெய்ய இந்திய அரசியல் சமூகத் தலைவர்கள் கட்சி பேதங்களை மறந்து நாடாளுமன்றத்திலும் சமூக மேடைகளிலும் ஒருமித்தக் குரலெழுப்ப தவறக்கூடாது.

அதே வேளை, 12-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்திய மேம்பாட்டுத் திட்டமான புளு பிரிண்ட் (BLUE PRINT) சேர்த்துக் கொள்ளப்பட்டதனால் அந்தப் புளு பிரிண்டில்  வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறை படுத்துமா?

இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கின்ற இத்திட்டம் இலவம் காத்தக் கிளிபோல ஆகாமலிருக்க,

இந்தியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் நிலைநிறுத்தக் குரல் எழுப்பும் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன், 12-ஆவது மலேசியத் திட்டத்தில் அடங்கியுள்ள இந்தியர்களின் மேம்பாட்டுத் திட்டமும் செயல்வடிவம் பெற அரணாகத் திகழவாரென நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal