Home நாடு 12-வது மலேசியத் திட்டம் : ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்திய சமூகம்!

12-வது மலேசியத் திட்டம் : ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்திய சமூகம்!

921
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டம் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் மலேசிய இந்திய சமூகத்திற்குக் கிடைக்கப் போவது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள இந்திய சமூகத்தின் பல தரப்புகளும் ஆர்வத்துடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்திய சமூகத்திற்கென பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தார். இந்திய சமூகம் தேசிய வளர்ச்சி நீரோட்டத்தில் பின்தங்கிவிட்டதை உணர்ந்து, அதற்கேற்ப பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை நஜிப் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அது மட்டுமின்றி, இந்தியர்களின் உணர்வுகளோடு ஒன்றிவிட்ட தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் போன்ற அம்சங்களிலும் நஜிப் தனிக் கவனம் செலுத்தினார். புதிய 6 தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானத்தை அறிவித்தார்.

ஆலயங்களுக்கு அவரே நேரடி வருகை புரிந்தார். மானியங்கள் ஒதுக்கீடு செய்தார். இந்திய சமூகத்திற்கு பயனான வகையில் செயலாற்றி வரும் சில அரசு சாரா இயக்கங்களுக்கு நேரடியாக மானியங்கள் வழங்கினார்.

இந்தியர் உருமாற்றத் திட்டத்தை செயல்படுத்தினார். அதன்வழி செடிக் எனப்படும் இந்தியர் மேம்பாட்டுப் பிரிவை பிரதமர் இலாகாவின் கீழ் கொண்டு வந்தார். ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் மானியத்தை அந்த அமைப்புக்காக ஒதுக்கினார்.

ஆனால் 2018-ஆம் ஆண்டு தொடங்கி 3 ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், இதுவரையில் உருப்படியான திட்டங்கள் எதுவும் இந்தியர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்தான் இன்று சமர்ப்பிக்கப்படும் மலேசியத்  திட்டத்தில் இந்தியர்களுக்கு கிடைக்கப் போவது என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

12-வது மலேசியத் திட்ட உருவாக்கத்தில் இந்திய சமூகத்தினர் விடுபட்டிருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2011-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது 11ஆவது மலேசியத் திட்டம். அந்தத் திட்டம் 2020ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

அதற்கடுத்த 5 ஆண்டுத் திட்டமாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் இந்த 12-வது மலேசிய திட்டம் தொடர்பில் அதனை வரைந்தவர்கள் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் யாருடனும் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்கவில்லை என கணபதி ராவ் கூறியிருந்தார்.

இது குறித்து அவர்கள் தன்னைப் போன்ற இந்திய சட்டமன்ற உறுப்பினர்களிடம் கலந்துரையாடி எங்களின் கருத்துக்களை பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் பல தரப்புகளிலும் இதுபோன்ற மனக் குறைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இஸ்மாயில் சாப்ரியின் 12-வது மலேசியத் திட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal