Home நாடு மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக் காவலில்…

மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக் காவலில்…

570
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஒரு நிறுவன இயக்குனரும் ஒரு சங்கத்தின் தலைவரும் உள்ளிட்ட 22 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் மித்ரா மானிய நிதி முறைகேடுகள் தொடர்பில் கைது செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை 7 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராக், சிலாங்கூர், கெடா, ஜோகூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகியவையே அந்த மாநிலங்களாகும்.

மித்ரா  எனப்படும்  மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு இந்திய சமூகத்திற்கு வழங்கிய மானியங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இயக்கங்களின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அடங்குவர்.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவர்களில் ஆறு நபர்கள், 4 முதல் 6 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். சிலாங்கூர், கெடா, புத்ரா ஜெயா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் இந்த அறுவருக்கும் தடுப்புக் காவல் ஆணை வழங்கப்பட்டது. மற்றவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிணையின் அடிப்படையில் கைதுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர்.

2019 முதல் 2021 வரை மித்ராவின் சுமார் 203 மில்லியன் நிதி, மானியங்களாக 337 நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தகவல்கள் தெரிவித்தன.

முதல்கட்டமாக 27 நிறுவனங்கள், இயக்கங்கள் மீதான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் ஒரு மில்லியன் முதல் ஒன்பது மில்லியன் வரையிலான மானிய ஒதுக்கீடுகளை பெற்றன.

கடந்த அக்டோபர் 2021-இல் ஊழல் தடுப்பு ஆணையம் மித்ராவின் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளை தொடங்கியது. அதைத் தொடர்ந்து, 10 அமைப்புகளை சார்ந்த 18 நபர்களை கைது செய்தது.

மித்ரா 2.0 என்னும் அடைமொழியுடன் இயங்கி வரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் 1 மில்லியன் முதல் 17 மில்லியன் வரையிலான மானியங்களைப் பெற்ற அமைப்புகளைக் குறி வைத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

மித்ரா, ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் தற்போது இயங்கி வருகிறது. இதன் காரணமாக அந்த அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றி வரும் ஊழல் தடுப்பு ஆணையம், ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து ஒரு மில்லியனுக்கும் குறைவான  மானியங்கள் பெற்ற நிறுவனங்களையும் அமைப்புகளையும் விசாரித்து வருகிறது.

2019 முதல் 2020 வரை மித்ராவின் மானியங்களை பெற்ற அமைப்புகளின் விண்ணப்பங்கள், செலவின விவரங்கள், திட்டங்கள் ஆகியவை தொடர்பான விவகாரங்களை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.