Home கலை உலகம் லதா மங்கேஷ்கர்: இறுதி பிரியாவிடை பெற்றுக் கொண்ட இசைக்குயில் வாழ்வின் சுவாரசியங்கள்

லதா மங்கேஷ்கர்: இறுதி பிரியாவிடை பெற்றுக் கொண்ட இசைக்குயில் வாழ்வின் சுவாரசியங்கள்

819
0
SHARE
Ad

மும்பை: சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இனிய, வசீகரிக்கும் குரலால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஈர்த்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர் மருத்துவமனையில் இருந்து நலமடைந்து இல்லம் திரும்பினார். இருப்பினும் மீண்டும் அவர் உடல் நலம் குன்றி மரணமடைந்தார்.

அவரின் மரணம் தொடர்பான சில தகவல்களையும், அவரின் வாழ்க்கைச் சுவாரசியங்களையும் காண்போம்:

  • அவரின் இறுதிச் சடங்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
  • 13-வது வயது முதல் பாடியவர் லதா மங்கேஷ்கர்
  • பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பழம்பெரும் பாடகியான லதா, இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’என அழைக்கப்பட்டார்.
  • 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.
  • ஐந்து குழந்தைகளில் மூத்தவரான லதா மங்கேஷ்கர் தன் ஐந்தாவது வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கி விட்டார். தன்னுடைய 13 வயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
லதாவின் சகோதரி பாடகி ஆஷா போன்ஸ்லேயுக்குஆறுதல் கூறும் நரேந்திர மோடி
  • தன் தந்தையின் நெருங்கிய நண்பரான விநாயக் என்பவரது உதவியுடன் 1942ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘கிஸி ஹசாய்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை.
  • ஆனால் அதே ஆண்டு வெளியான ‘பஹ்லி மங்களா கவுர்’ என்ற படத்தில் லதாவுக்கு ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பையும் லதா பெற்றார். 1943ஆம் ஆண்டு வெளியான ‘கஜாபாவ்’ என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒரு இந்திப் பாடலை லதா பாடினார்.
  • 1945 ஆம் ஆண்டு மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்த லதா அங்கு இந்துஸ்தானி இசையை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அதன் பிறகு விநாயக்கின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களில் லதாவும் அவரது தங்கை ஆஷாவுக்கும் சின்னச் சின்ன வேடங்கள் கிடைக்கத் தொடங்கின.
  • 1948-இல் வெளியான ‘மஜ்பூர்’ என்ற படத்தில் “தில் மேரா தோடா” என்ற பாடலை பாடும் வாய்ப்பை இசையமைப்பாளர் குலாம் ஹைதர் லதாவுக்கு வழங்கினார். இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. கூடவே லதாவும் பிரபலமாகி விட்டார். இதனால் தான் பின்னாட்களில் ஒரு பேட்டியில் குலாம் ஹைதர் தான் தன்னுடைய உண்மையான குருநாதர் என்று லதா உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.
  • லதாவின் உருது மொழி உச்சரிப்பு சரியாக இல்லை என்று நடிகர் திலீப் குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உடனடியாக ஒரு உருது ஆசிரியரிடம் ஒரே மூச்சாக உருது மொழியைக் கற்றுக் கொண்டு அதிலும் தேர்ந்தார் லதா.
  • 1950-ஆம் ஆண்டுகளில் லதா மங்கேஷ்கரின் குரல் இல்லாத படங்களே இல்லை என்று நிலை உருவானது.
  • ஷங்கர் ஜெய்கிஷன், நௌஷாத் அலி, எஸ்.டி. பர்மன் தொடங்கி சஜ்ஜாத் ஹுசைன் வரை அந்த ஆண்டில் பிரபலமாக இருந்த அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் லதா பாடினார்.
  • 1956ஆம் ஆண்டு வெளியான ‘உரான் கோட்டாலா’ இந்திப் படம் தமிழில் ‘வானரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை லதா பாடியிருந்தார்.
  • 1960ஆம் ஆண்டு வெளியான ‘முகல் இ அஸாம்’ திரைப்படம் லதாவின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. நௌஷாத் அலி இசையில் ஒன்பது பாடல்களை லதா இப்படத்துக்காக பாடியிருந்தார். 9 பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. லதாவின் குரலுக்காகவே பல்லாயிரக்கணக்கான இசைத்தட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இப்படத்தின் பாடல்கள் இன்று வரை பிரபலமாக இருந்து வருகின்றன.
  • 1970களில் பிரபலமாக இருந்த கிஷோர் குமார், முஹம்மது ரஃபி, முகேஷ், எஸ்.பி. பாலசுப்ரமணியன் தொடங்கி தற்கால பாடகர்களான உதித் நாரயணன், சோனு நிகம், அத்னான் சமி என ஏராளமான பாடகர்களோடு லதா சேர்ந்து பாடியுள்ளார்.
  • இளையராஜா இசையில் ‘சத்யா’ படத்தில் எஸ்.பி.பியுடன் அவர் இணைந்து பாடிய ‘வளையோசை கலகலவென’ பாடல் எவர்க்ரீன் காதல் பாடலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
  • 2006ஆம் ஆண்டு ‘ரங் தே பசந்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானோடு அவர் பாடிய ‘லுக்கா சுப்பி’ என்ற பாடல் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரிட்டாக இருந்து வருகிறது.
  • 1955-லேயே ‘ராம் ராம் பாவ்னே’ என்ற மராத்தி படத்துக்கு லதா மங்கேஷ்கர் இசையமைத்துள்ளார். அதன் பிறகு 60களில் வெளியான ஐந்து மராத்தி படங்களுக்கு ஆனந்த் கன் என்ற பெயரில் இசையைத்துள்ளார் லதா. இதில் ‘சதி மனாசே’ என்ற படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான மகாராஷ்டிர அரசின் விருதைப் பெற்றார்.
  • 2001ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது. ‘பாரத ரத்னா’ விருது வென்ற இரண்டாவது பாடகி என்ற பெருமையை லதா பெற்றார். முதலாமவர் மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி.
  •  எந்த திலீப் குமார் லதாவின் உருது மொழி உச்சரிப்பு குறித்து விமர்சனம் செய்தாரோ அதே திலீப் குமார் லதாவின் குரல் கடவுளிடமிருந்து வந்த அற்புதம் என்று பின்னாட்களில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
  • 1948 முதல் 1987 வரை 30,000க்கும் அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார் லதா மங்கேஷ்கர். ஆனால் ஒரு பேட்டியில் இது குறித்து லதா மங்கேஷ்கர் பேசும்போது, “நான் எத்தனை பாடல்களை பாடுகிறேன் என்று நான் கணக்கெடுப்பதில்லை. ஆனால் கின்னஸ் நிர்வாகத்தினருக்கு அந்த தகவல்கள் எப்படி கிடைத்தன என்று தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.
  • பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள அந்த மந்திரக் குரல் இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.