கோலாலம்பூர் : ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான ஊழல் புகார்கள் தனக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும் என லலிதா குணரத்னம் (படம்) பதில் சத்திய பிரமாண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அசாம் பாக்கி, லலிதாவுக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அந்த வழக்கு தொடர்பில் பதில் சத்தியப் பிரமாண அறிக்கையை லலிதா குணரத்னம் சமர்ப்பித்திருக்கிறார். அந்தப் பதிலில்தான், தனக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான போராட்டவாதியான லலிதா, அசாம் பாக்கியின் பங்குரிமைகள் குறித்து கட்டுரைகள் எழுதி, அந்த விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவராவார்.
தனது பதில் அறிக்கை சத்தியப் பிரமாணத்தை இப்ராகிம் & புவாடா என்னும் வழக்கறிஞர்கள் நிறுவனம் மூலம் லலிதா பதிவு செய்தார்.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி லலிதாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த அசாம் பாக்கி, அந்த வழக்கின்வழி 10 மில்லியின் ரிங்கிட் இழப்பீடு கோரியிருக்கிறார்.