Home நாடு செல்லியல் பார்வை : கெடா, பேராக், சபா–  ஜோகூருக்கு அடுத்து எந்த சட்டமன்றம் கலைக்கப்படும்?

செல்லியல் பார்வை : கெடா, பேராக், சபா–  ஜோகூருக்கு அடுத்து எந்த சட்டமன்றம் கலைக்கப்படும்?

660
0
SHARE
Ad

(மலேசிய தேர்தல் அரசியல் பரபரப்பு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைந்துவிடப் போவதில்லை. பொதுத் தேர்தலும் வரலாம். கெடா, பேராக், சபா ஆகிய 3 மாநிலங்கள் பெர்சாத்து-அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணியால் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் ஜோகூருக்கு அடுத்து கவிழப் போகும் மாநில அரசாங்கம் எது? அந்த மாநிலங்களின் நிலவரங்களை தன் அரசியல் பார்வையில் முன்வைக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில்  அம்னோ,  பெர்சத்து, பாஸ் ஆகிய கட்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளப் போவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்த மோதலின் எதிரொலி மத்திய அரசாங்கதிலும் பிரதிபலிக்குமா? அதனால் மத்திய அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களால் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. அந்த விவாதத்தை இன்னொரு நாளில் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

தற்போது கெடா, பேராக், சபா ஆகிய 3 மாநில அரசாங்கங்கள் அம்னோ, பாஸ், பெர்சத்து இணைந்த கூட்டணியின் காரணமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றன.

ஜோகூர் தேர்தலில்  விளையப் போகும் மோதல்களினால் இந்த மூன்று கட்சிகளும் அடுத்தடுத்து தங்களின் பலத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும்  காட்டிக் கொள்ள முனையலாம். அதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட மூன்று மாநில அரசாங்கங்களும்  அடுத்தடுத்து கவிழக்கூடிய  அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலில் கெடா மாநிலத்தைப் பார்ப்போம்.

பெர்சத்துபாஸ் கூட்டணியால் கெடா  தப்பித்துக் கொள்ளலாம்

மொத்தமுள்ள 36 தொகுதிகளில் 15 தொகுதிகளை பாஸ் தன் கைவசம் வைத்துள்ள மாநிலம் கெடா. அதன் காரணமாகவே, அங்கே பாஸ் கட்சியைச் சேர்ந்தவர் மந்திரி பெசாராக இருக்கிறார்.

6 தொகுதிகளை பெர்சாத்து கொண்டிருக்கிறது. மொத்தமுளள 36 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான பெரும்பான்மை 18 மட்டுமே!

பாஸ், பெர்சத்து இரண்டும் இணைந்து  21 தொகுதிகளைக் கொண்டிருப்பதால்  கெடா மாநில  அரசாங்கம் இப்போதைக்குக் கவிழ வாய்ப்பில்லை.

இந்த இரண்டு கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள்  யாராவது விலகினால் மட்டுமே அல்லது கட்சி மாறினால் மட்டுமே கெடா அரசாங்கம் ஊசலாட்டத்தில் தள்ளப்படும்.

பேராக்– கவிழும் அபாயம் அதிகமுள்ள மாநிலம்

சாரானி முகமட்

ஒரு சிக்கலான தொகுதி பங்கீட்டில் பேராக்கில்  அரசியல்  கட்சிகள் இணைந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன.

2018 தேர்தலில் வாக்காளர்கள் தேர்வு செய்த கட்சிகளின் வேட்பாளர்கள், தங்களுக்கு வாக்களித்த கட்சிகளுக்கு துரோகமிழைத்து, கட்சி மாறியுள்ளனர். எனவே, 2018-இல் ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வேட்பாளர்கள், அதன் பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு மாறியிருக்கும் அவலம் பேராக்கில் நிகழ்ந்திருக்கிறது.

இருந்தாலும்,  இன்றுவரை பேராக் அரசாங்கம் கவிழாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஜோகூர் தேர்தலுக்குப் பிறகும்  அரசியல் கட்சிகளின் மோதல்களினால் மாநில அரசாங்கம் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

மொத்தம் 59 தொகுதிகளைக் கொண்டது பேராக். இதில்  அம்னோ மட்டும் தேசிய முன்னணி சார்பில் 25 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

ஆட்சியில் நீடிக்கத் தேவைப்படும் பெரும்பான்மை குறைந்தது 30 தொகுதிகளாகும். எஞ்சிய சட்டமன்றத் தொகுதிகளில் பெர்சத்து 4 தொகுதிகளையும், பாஸ் 3  தொகுதிகளையும் கொண்டிருக்கிறது.

ஆக, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் 7 கூடுதல்  தொகுதிகள் மூலமேதான் பேராக்கில் அம்னோ ஆட்சி செய்கிறது.

பாஸ், பெர்சத்து இரண்டும்  ஜோகூரில் அம்னோ மேற்கொண்ட முடிவுக்கு எதிராக- அம்னோவைப் பழிவாங்கும் விதமாக – பேராக்கில் தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டால் அதனால் பேராக் மாநில அரசாங்கம் நிச்சயம் கவிழும்.

தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால், அம்னோ,  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவை நாட வேண்டும்.

பக்காத்தான் சார்பில் ஜசெக 15 தொகுதிகளையும் பிகேஆர் 3 தொகுதிகளையும்  அமானா 5 தொகுதிகளையும் தற்போது கொண்டிருக்கின்றன.

அம்னோ மாநில அரசாங்கம் பேராக்கில் தொடர்வதற்கு பக்கத்தான் கூட்டணி, ஆதரவு வழங்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

பேராக் மாநிலத்தில்  இன்னொரு சுவாரசியமும் உண்டு.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘பார்ட்டி பங்சா மலேசியா’ எனப்படும் பிபிஎம் கட்சியில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி  மாறி இணைந்துள்ளனர். மொத்தமுள்ள 59 தொகுதிகளில் நேற்று தோன்றிய பிபிஎம் கட்சி 3 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிசயமும் பேராக்கில் நிகழ்ந்திருக்கிறது.

ஒரே ஒரு சுயேட்சை உறுப்பினரும் நடப்பு பேராக் அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

அம்னோ (25), பெர்சாத்து (4), பாஸ் (3), பிபிஎம்(3), சுயேட்சை (1) ஆகியவை இணைந்திருப்பதால் 36 தொகுதிகளோடு சரானி முகமட் மந்திரி பெசாராக நீடிக்கிறார். இதில் பாஸ், பெர்சாத்து இரண்டும் ஆதரவை மீட்டுக் கொண்டால் சரானி முகமட் அரசாங்கத்தின் பலம் 29 ஆகக் குறையும்.

இதனால், ஜோகூர் தேர்தலுக்குப் பிறகு பெர்சத்து கட்சியும்  பாஸ் கட்சியும் முடிவெடுத்தால் கவிழப் போகும் முதல் மாநில அரசாங்கம் பேராக்காகத்தான் இருக்கும்.

சபா நிலைமை என்ன?

இன்னொரு வித்தியாசமான கூட்டணி அரசாங்கமாக சபா  மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

2020-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 73 தொகுதிகளுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆட்சியைப் பிடித்த பெர்சாத்து தலைமையிலான கூட்டணி, மாநில அரசாங்க சட்டத்தின்படி கூடுதலாக 5 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்துக் கொண்டது.

ஆக, இந்த மாநில சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆட்சி செய்யத் தேவைப்படும் பெரும்பான்மை 40-தான்.

தற்போது பெர்சத்து கட்சிதான் 16 தொகுதிகள் பலத்தோடு ஆட்சி செய்து வருகின்றது. ஆனால், அவர்கள் ஆட்சி  தொடர்வதற்கு அம்னோ 16 சட்டமன்றத் தொகுதிகளுடன் தனது ஆதரவை வழங்கி இருக்கிறது.

மற்ற சில கட்சிகள் பெர்சத்துக்கு ஆதரவு தருவதால் இன்றையநிலையில் பெரும்பான்மையோடு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் சபா மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது.

ஆனால்,  ஜோகூர் மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் இதே  நிலைமை தொடருமா என்பது சந்தேகம்தான்.

அம்னோ தனது ஆதரவை மீட்டுக்கொண்டால் சபா மாநிலத்தில்  பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி கவிழும் அபாயம் இருக்கிறது. ஆனால்,  சபாவில் மட்டும் இந்த இரண்டு கட்சிகளும்  எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காரணங்கள் நிறையவே இருக்கின்றன.

இவர்களுக்கிடையிலான மோதலில் மீண்டும் சட்டமன்றத்  தேர்தல் நடந்தால் ஷாஃபி அப்டாலின் வாரிசான் சபா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய ஆபத்து இருப்பதால் சபாவில் மட்டும் பெர்சத்து – அம்னோவும் அடக்கி வாசிக்கும் நிலைமையைப் பார்க்கலாம்.

உயர்ந்து கொண்டே போகும் ஷாபி அப்டாலின் செல்வாக்கு

2020 ஆம் ஆண்டில் சபா சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது,  ஷாஃபி அப்டாலுக்கு இருந்த செல்வாக்கு குறைவு. சபா முதலமைச்சராக மட்டுமே அவர் பார்க்கப்பட்டார்.

சபா மாநிலத்தை மட்டும் சார்ந்த ஓர் அரசியல்  தலைவராகவும் அவர் தோற்றம் கொண்டிருந்தார். ஆனால், இன்றோ நிலைமை வேறு.

அடுத்தப் பிரதமர் வேட்பாளராக அவர் பல தருணங்களில் பல அரசியல் தலைவர்களால்  பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

தனது வாரிசான் சபா கட்சியை மேற்கு மலேசியாவுக்கு  விரிவாக்கம் செய்திருக்கிறார். பல இன அரசியலை முன்னெடுத்திருக்கிறார். இளம் வாக்காளர்களிடையே பிரபலமாகியுள்ள மூடா கட்சியுடன் இணைந்து கரம் கோர்த்திருக்கிறார்.

எனவே, இந்த முறை சபா சட்டமன்றத் தேர்தல் நடந்தால் பெர்சத்து, அம்னோ  கட்சிகளுக்கிடையிலான மோதல்களில் வாரிசான் சபா நிறையவே இலாபம் அடையக்கூடிய வாய்ப்பு  இருக்கிறது.

எனவே, சபாவில் மட்டும் இந்த இரண்டு கட்சிகளும்  இயன்றவரையில் மோதல்களைத் தவிர்த்து தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜோகூர் தேர்தல் முடிவடைந்தவுடன் – அதன் முடிவுகளின்  அடிப்படையில்  மேற்குறிப்பிட்ட மூன்று மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலம் – முதலில் கவிழ்க்கப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

-இரா.முத்தரசன்