டாக்கா : மலேசியாவுக்கு வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிக்கும் விவகாரம் தொடர்பில் டாக்காவுக்கு வருகை தந்திருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மரியாதை நிமித்தமாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து உரையாடினார்.
அவரைச் சந்தித்து உரையாடியது எனக்கு வாய்த்த கௌரவமும் பாக்கியமும் ஆகும் என சரவணன் விவரித்தார்..
“மலேசியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் மலேசியாவின் முன்முயற்சியைப் பகிர்ந்துகொண்டேன். பல்வேறு முன்முயற்சிகளில் ஒரு புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடு, வாழ்க்கைத் தரம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துதல் ஆகியவை அடங்கும். மாண்புமிகு பிரதமர் அவர்கள் எங்கள் முயற்சிகளை முழுமையாகப் பாராட்டினார். இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு வளரவும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்” சரவணன் மேலும் தெரிவித்தார்.
“அவர் மிகவும் பரிவாகவும், எங்களிடம் நடந்து கொண்டார். எங்களின் அனைத்து முயற்சிகளையும் புரிந்துகொண்டு, மக்களின் முன்னேற்றத்திற்காக தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் எங்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்” என்றும் சரவணன் தனது சந்திப்பு குறித்து குறிப்பிட்டார்.