Home நாடு பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

725
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எதிர்பார்க்கப்பட்டது போலவே பி.டி.3 என்னும் 3-ஆம் படிவத்துக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகள் இரத்தாகியுள்ளன. கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் 2022 முதல் இந்தத் தேர்வுகள் இரத்தாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, யூபிஎஸ்ஆர் தேர்வுகளும் இரத்தாகியுள்ள நிலையில், இப்போது 3-ஆம் படிவத் தேர்வுகளும் இரத்தாகியுள்ளன. எனவே, இனி முதலாம் வகுப்பு தொடங்கி 5-ஆம் படிவம் வரை மாணவர்கள் எந்தவித அரசாங்கத் தேர்வுகளும் இன்றி 5-ஆம் படிவம் வரை படிக்கலாம்.

பள்ளி அளவிலான மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், இது எந்த அளவுக்கு தீவிரமாகச் செயல்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியே!

#TamilSchoolmychoice

பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களின் தேர்ச்சிகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் சற்று ‘தாராளமாக’ புள்ளிகளை அள்ளித் தரும் முறை பின்பற்றப்படலாம். சில ஆசிரியர்கள் சில மாணவர்களுக்கு புள்ளிகளைத் தருவதிலும், தேர்ச்சி பெற வைப்பதிலும் பாரபட்சம் காட்டலாம்.

மாணவர்களோ இனி யாரும் ஆர்வம் எடுத்தோ, அக்கறையோடோ படிக்கப் போவதில்லை. தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் – மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டும் – என்ற உந்துதல் இனி அவர்களிடத்தில் இருக்காது.

இறுதியில் 5-ஆம் படிவத்திற்கு வரும்போது மாணவர்களுக்கு அப்போதுதான் புதிதாக தேர்வுக் கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படும். இது நன்மையா – மாணவர்களைச் சோம்பலாக்கும் ஒரு நடைமுறையா – என்பதெல்லாம் ஆய்வுக்குரியவை.

இந்தியா போன்ற பல நாடுகளில் இன்னும் தேர்வுக் கலாச்சாரம் பல கட்டங்களாகத் தொடர்கிறது. மிகச் சிறந்த மாணவர்களை அந்த நாட்டுக் கல்வி முறை உருவாக்கியிருக்கிறது. அந்தக் கல்வி முறையில் படித்து வந்தவர்கள்தான் இன்று அனைத்துலக நிறுவனங்களை தலைமையேற்று நடத்துகிறார்கள்.

என்னதான் கூறினாலும் பி.டி.3 மீண்டும் கொண்டுவரப்படப் போவதில்லை.

பி.டி.3 தேர்வு இரத்தால் ஏற்படக் கூடிய பயன்களையோ – எதிர்மறை விளைவுகளையோ – அடுத்து வரும் சில ஆண்டுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை வைத்து – குறிப்பாக 5-ஆம் படிவத் தேர்ச்சி விகிதங்களை வைத்துத்தான் நம்மால் கணிக்க முடியும்.