அண்மையக் காலத்தில் தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த வரப் பிரசாதம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக அவரின் படங்களைப் பார்த்தால் ஓர் ஒற்றுமையைக் காணமுடியும். ஓர் உச்ச நட்சத்திரக் கதாநாயகன் கையில் கிடைத்து விட்டாரே என்று, அந்தக் கதாநாயகனைப் புகழ்ந்து ஒரு ஹீரோ பாடல், அழகான கதாநாயகியோடு வெளிநாட்டுப் பாடல் காட்சிகள் என வழக்கமானக் கதைகளை அவர் படமாக்குவதில்லை. மாறாக, நுணுக்கமானத் திரைக்கதையில் பொருத்தமாக அந்த ஹீரோ கதாபாத்திரத்தை உள்ளே நுழைத்து விடுகிறார்.
கைதி, மாஸ்டர் படங்களிலும் லோகேஷ் இந்தப் பாணியைப் பின்பற்றி அந்தப் படங்களை வெற்றியடைய வைத்தார்.
விக்ரம் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. கமல்ஹாசனுக்கான ஹீரோ கதையாகப் படைக்காமல், கமலின் வயதுக்கேற்ற வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். கமலுக்கு கதாநாயகி என யாருமில்லை. காதல் காட்சிகளும் இல்லை. ஒரே ஒரு குழு குத்துப் பாடல் மட்டும் உண்டு. ஏற்கனவே, பிரபலமாகியிருக்கும் ‘பத்தலை, பத்தலை’ பாடல்! இன்றைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் 67 வயது கமலும் ஆட்டத்தில் அசத்தியிருக்கிறார்.
அதனால்தான் படமும் தனித்து நிற்கிறது. இயல்பான நடிப்பை வழங்கும் பகத் பாசில் ஒருபுறம் – மிரட்டும் வில்லத்தனத்துடன் விஜய் சேதுபதி இன்னொரு புறம் – எனத் திறன்வாய்ந்த இரண்டு இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் கமல்.
படத்தின் சிறப்பு அம்சங்கள்
சரி! படத்திற்கு வருவோம்! கைதி படத்தைப் போலவே மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் ஓரிடத்தில் மறைத்து வைக்கப்படுகிறது. அதைக் கண்டுபிடிக்க வில்லன் விஜய் சேதுபதி கோஷ்டியினர் மும்முரமாக ஈடுபடுகின்றனர். இன்னொரு தடத்தில் காவல் துறையின் முக்கிய அதிகாரிகளும் முகமூடி அணிந்த குழுவினரால் கொல்லப்படுகின்றனர். அவர்கள் கொல்லப்படும் காட்சிகள் காணொலியாக எடுக்கப்பட்டு பகிரப்படுகின்றன.
இடைவேளைக்குப் பின்னர் படம் இன்னொரு தடத்தில் பயணம் செய்கிறது. முதல் பாதியில் அடக்கி வாசிக்கிறார் கமல். மிகக் குறைவான வசனங்கள். வரும் காட்சிகள் கூட மிகக் குறைவு.
படத்தில் பாடல்கள் அதிகமாக இல்லை. கமல் பாடலோடு பின்னணியில் ஒலிக்கும் ஒரு பாடல் – அவ்வளவுதான்!
ஒளிப்பதிவு தரமாக இருந்தாலும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலும், வெளிச்சம் குறைந்த இடங்களிலும் நடைபெறுவது போல் காட்டப்படுகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையில் கிடைத்த 3 பெரிய நடிகர்களை சரிசமமாகப் பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் விஜய் சேதுபதி உண்மையிலேயே மிரட்டல். தன்னைக் கைது செய்து ஆட்டோவில் அழைத்துச் செல்லும் போலீஸ்காரரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சட்டையில்லாத உடம்புடன் தெருவில் நடக்கும் கெத்து – போதைப் பொருளை உட்கொண்டதும் வீரியம் கொண்டு எழுந்து நடத்தும் அதகள சண்டைகள் – தங்கப் பல்லைக் காட்டிக் கொண்டு அதற்கேற்ப குரலை மாற்றிக் கொண்டு பேசும் பாணி – எதிர்ப்பதில் காட்டும் கொடூரம் – இப்படி பல வகைகளிலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப அசத்தியிருக்கிறார். கமலுடன் இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமான மோதலையும் செய்திருக்கிறார்.
படத்தின் இறுதியில் சூர்யாவைக் கொண்டு வந்து இணைத்திருக்கும் விதம் இரசிக்கும்படி இருக்கிறது. எப்போது வருவார் எனக் காத்திருக்கும் இரசிகர்களும் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர்.
படத்தின் ஆரம்பத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி பெயரைப் போட்டு நன்றி எனப் போடுகிறார்கள். சூர்யாதானே நடித்திருக்கிறார் – தம்பிக்கு ஏன் நன்றி? என்ற கேள்வியோடு படம் பார்த்தால் படத்தில் இறுதியில் அதற்கான பதிலும் கிடைக்கிறது.
தனது முந்தைய படமான கைதியின் சில காட்சிகளையும், அந்தத் திரைக்கதையின் சில பகுதிகளையும் விக்ரம் படத்தில் பொருத்தமாக இணைத்து பாராட்டு பெறுகிறார் லோகேஷ்.
படத்தில் பாராட்டு பெறும் இன்னொரு அம்சம் அனிருத்தின் பின்னணி இசை. பல இடங்களில் அசத்தியிருக்கிறார்.
படத்தின் பலவீனங்கள்
படத்தில் காட்டப்படும் துப்பாக்கிச் சூட்டுக் காட்சிகள் சில இடங்களில் மிக நீளமாக இருக்கின்றன. வழக்கம்போல், எத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டாலும் கமல் தப்பிப்பதும், அடுத்தடுத்து பத்து இருபது பேர்களை ஒரே காட்சியில் அடித்து வீழ்த்துவதும் கொஞ்சம் சலிப்படையச் செய்கிறது.
படத்தின் இறுதிக் காட்சிகள் அப்படியே கைதியை நினைவுபடுத்துகின்றன. படத்தின் மையக் கருவும் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்-பதுக்கல் என்பது இயக்குநரின் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது. இருந்தாலும் அந்த மையக் கருவைச் சுற்றி, கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதையை வடித்திருப்பதால் அவரை மன்னித்து விடலாம்.
இருந்தாலும் ஒரு வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை, இறுதிவரை பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளோடு தந்திருக்கும் விதத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும், அவரின் திரைக்கதைக்கு ஏற்ப சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் கமல்-விஜய் சேதுபதி-பகத் பாசில் கூட்டணியையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும்.
தவறாமல் பார்க்கலாம்!