லாஸ் ஏஞ்சல்ஸ் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றுவரும் (அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 12-ஆம் தேதி இரவு) ஆஸ்கார் விருதுகள் விழாவில் ‘எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணப் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் அந்தப் படத்திற்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
கைவிடப்பட்ட யானைக்குட்டிகளை தமிழ் நாட்டு பழங்குடி தம்பதியர் எடுத்து வளர்க்கும் சம்பவங்களை விவரிக்கும் எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப் படத்தில் உரையாடல்கள் முழுக்க முழுக்க தமிழிலேயே இடம் பெற்றிருக்கின்றன. அந்த உரையாடல்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் மட்டும் திரையில் காட்டப்படுகின்றன.
நாட்டு நாட்டு பாட்டுக்கும் விருது
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் (ஒரிஜினல் பாடல்) என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களில் இந்தப் பாட்டுக்கு விருது கிடைத்தது. விருதை பாடலின் இசையமைப்பாளர் கீரவாணியும் பாடல் எழுதியவரும் பெற்றுக் கொண்டனர்.
ஆஸ்கார் விருதுகள் வரலாற்றில் இந்திய சினிமாப்படம் ஒன்று பாடலுக்காக விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஸ்லம்டோக் மில்லியனேர் படத்திற்காக ஏ.ஆ.ரஹ்மான் ஜெய் ஹோ என்ற பாடலுக்காக கடந்த 2008-ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது பெற்றார்.