புதுடில்லி : அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
புஷ்பா – தெ ரைஸ் – முதல் பாகம் – படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்தப் படத்தில் உடலை சற்று கோணலாக வைத்து நடந்து கொண்டு அவர் காட்டிய உடல்மொழிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மாதவன் படத்திற்கு தேசிய விருது
இதற்கிடையில் நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படம் சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருதை வென்றிருக்கிறது.
2021-ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார் . நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ராக்கெட்டரி தி நம்பி விளைவு சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் தேசிய விருதை வென்றுள்ளது.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை – சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
நிலவில் சந்திராயன் – 3 கால் பதித்திருக்கும் தருணத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கைக் கதைக்கு விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமான ஒன்றாகக் கருதப்படுகிறது.