ஜோகூர்பாரு : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெப்பம் தணியும் முன்னே, அடுத்த கட்ட அரசியல் அனல் காற்று பூலாய் நாடாளுமன்றத் தொகுதியை மையம் கொள்ளத் தொடங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சரும், அமானா கட்சியின் துணைத் தலைவருமான சாலாஹூடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெறவிருக்கிறது.
ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், மறைந்த சாலேஹூடின் அயூப்பின் அரசியல் செயலாளருமான சுஹைசான் கையாட், அமானா கட்சி சார்பில் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பூலாய் பெர்சாத்து தொகுதியின் துணைத் தலைவர் சுல்கிப்லி ஜாஃபா பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சாலேஹூடின் அயூப் 33,174 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணியின் நூர் ஜாஸ்லானைத் தோற்கடித்தார். நூர் ஜாஸ்லானுக்கு 26,523 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. பாஸ் வேட்பாளருக்கு 4,332 வாக்குகள் கிடைத்தது.
6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மற்ற மாநிலங்களில் வீசிய பெரிக்காத்தானின் ‘பச்சைப் புயல்’ ஜோகூரிலும் நுழைய முடியுமா என்பதை பூலாய் இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்.