சிங்கப்பூர் : சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் மீது ஊழல் நடவடிக்கைகளை விசாரிக்கும் இலாகா விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரை விடுமுறையில் செல்லுமாறு பிரதமர் லீ சியன் லூங் கடந்த புதன்கிழமை (ஜூலை 12) பணித்துள்ளார்.
61 வயதான ஈஸ்வரன் மீதான விசாரணை தொடர்பில் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஓங் பெங் செங் மீது கைது முன்னறிவிப்பு (நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. அவர் 100 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் முன் ஜாமீன் செலுத்தியுள்ளார். ஈஸ்வரனுடனான தொடர்புகள் குறித்து விளக்கமளிக்க 77 வயதான ஓங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறையில் இருக்கும்போது ஈஸ்வரன் சிங்கப்பூரிலேயே இருந்து வருவார் என்பதுடன் அரசாங்கத் தரவுகள், அரசாங்கக் கட்டடங்களை அவர் அணுக முடியாது.
ஈஸ்வரன் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஓங் பிரபல கார் பந்தயமான போர்முலா 1 போட்டிகளை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியவராவார். இரவு நேர போர்முலா 1 போட்டிகளை நடத்துவதற்காக ஏற்படும் 135 மில்லியன் டாலர் செலவுகளில் சிங்கப்பூர் ஜிபி நிறுவனம் 40 விழுக்காட்டை வழங்குகிறது. ஓங் இந்நிறுவனத்தின் தலைவராவார். எஞ்சிய 60 விழுக்காட்டு நிதியை சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் துறை அமைச்சு வழங்குகிறது.