சுங்கைப்பட்டாணி : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று ஞாயிற்றுக்கிழமை கெடா மாநில இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றை சுங்கைப் பட்டாணியில் நடத்தினார்.
விரைவில் நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கெடாவும் ஒரு மாநிலமாகும். ஒரே ஒரு சமூகத்தின் ஏழ்மை நிலையையும், வறுமையையும் ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கமன்று மாறாக, அனைத்து சமூகங்களில் வறுமையை ஒழிப்பதுதான் தன் ஒற்றுமை அரசாங்கத்தின் இலக்கு என அன்வார் வலியுறுத்தினார்.
அனைத்து மலேசிய சமூகங்களும் மலேசிய அரசியலமைப்பு சட்டங்களின்படி தங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் பெற ஒற்றுமை அரசாங்கம் பாடுபடும் எனவும் அன்வார் உறுதியளித்தார்.
இந்திய சமூகம் இதுவரையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அளித்துவரும் ஆதரவைத் தாங்கள் மிகவும் மதிப்பதாகவும் அன்வார் தனதுரையில் தெரிவித்தார். அரசாங்கம் திட்டமிட்டிருக்கும் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட இந்திய சமூகத்தின் ஆதரவு தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்டுறவு, தொழில் முனைவோர் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியும் கலந்து கொண்டார்.