Home இந்தியா ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன

ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன

489
0
SHARE
Ad

ஈரோடு (தமிழ்நாடு) – சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழ் நாட்டில் பிரபலமாகியிருக்கும் மற்றொரு புத்தகக் கண்காட்சி ‘ஈரோடு புத்தகத் திருவிழா’.

இந்த ஆண்டுக்கான (2023) ஈரோடு புத்தகத் திருவிழா
ஆகஸ்டு 4 முதல் 15 வரை – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம் அமைக்கப்படுகிறது. அந்த அரங்கத்திற்கான நூல்களைத் திரட்ட உதவுமாறு உலகத் தமிழர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்தியா நீங்கலாக உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாய்த் தமிழகத்தில் உள்ளோருக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் அயலகத் தமிழர்களின் படைப்பாற்றல், பண்பாட்டு – கலாச்சார உணர்வுகளை இங்குள்ளோரும் புரிந்து அவர்களை நேசிக்கச் செய்யும் அடிப்படையிலும் தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்குமான ஓர் உறவுப் பாலமாக – மக்கள் சிந்தனைப் பேரவை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலகத் தமிழர் படைப்பரங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்பு அரங்கத்தை சிரத்தையெடுத்து அமைத்து வருகிறது.

ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான அயலகத் தமிழ் நூல்கள் இந்தச் சிறப்பு அரங்கத்தில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்றன. வேறு பல நாடுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் மேன்மைக்காகவும் உழைத்த பெருமக்களின் திருவுருவப் படங்கள் அவர்களைப் பற்றியான குறிப்புகளுடன் இவ்வரங்கத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

வெளிநாட்டுத் தமிழ் ஆளுமைகளை வரவழைத்து அவர்கள் இங்கு உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தகத் திருவிழாவில் பொதுமக்களில் மிகவும் கவனத்திற்குரிய அரங்கமாக ஒவ்வோர் ஆண்டும் இது திகழ்ந்து வருகிறது.
இந்த ஆண்டு இலங்கைத் தமிழறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நினைவு – உலகத் தமிழர் படைப்பரங்கம் – என்ற பெயரில் இச்சிறப்பரங்கம் அமைக்கப்படவுள்ளது.

மாநிலம் தழுவிய அளவில் தேசியத் தரத்துடன் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் இந்தச் சிறப்பு அரங்கிற்கு நூல்களைத் திரட்டும் முயற்சியில் புத்தகப் பதிப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், புத்தக ஆர்வலர்கள் என அனைவரும் மனமுவந்து பங்கேற்று உதவுமாறு மக்கள் சிந்தனைப் பேரவை ஓர் அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறது.

வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களின் படைப்புகளை இவ்வரங்கத்தில் விற்பனைக்காக வைக்க அந்தந்த நாட்டிலுள்ள படைப்பாளிகள், செயல்பட்டு வருகிற தமிழ் அமைப்புகள் உதவிடலாம்.

காலமாகிவிட்ட படைப்பாளிகளாக இருப்பினும் அவர்களது படைப்புகள் சிறந்தவையாக இருக்குமெனில் அவர்களது குடும்பத்தினரோ தமிழ் அமைப்புகளோ அவர்களது நண்பர்களோ அப்படைப்புகளைப் பேரவையிடம் சேர்க்கலாம்.

வெளிநாட்டில் செயல்பட்டு வரும் பதிப்பகங்களும் இவ்வாறு தாங்கள் பதிப்பித்த வெளிநாடு வாழ் தமிழர்களின் சிறந்த படைப்புகளை அனுப்பலாம். வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களின் படைப்புகள் தாய்மண்ணில் உள்ள அவர்களது இல்லங்களிலோ அல்லது உறவினர்களிடமோ இருக்குமெனில் அவர்களிடம் இவ்விவரம் தெரிவித்து பேரவையைத் தொடர்பு கொள்ள வைக்கலாம்.

வாழும் நாடு குறித்த விவரங்கள் அடங்கிய ஆய்வு நூல்கள், அந்தந்த நாடுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் உயர்வுக்காகவும் தொண்டாற்றியவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், அந்தந்த நாட்டின் இயல்பிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உருவான படைப்புகளான கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகியவற்றின் தொகுப்புகள், நாவல்கள், காப்பியங்கள், இலக்கிய ஆய்வு நூல்கள், பயண அனுபவங்கள், அறிவியல் நூல்கள், திறனாய்வு நூல்கள், சிறப்பு மலர்கள், அங்கு செயல்பட்டு வருகிற தமிழ் அமைப்புகளின் வெளியீடுகள் போன்ற நூல்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளிநாட்டில் வாழ்கிற தமிழர்களின் படைப்புகளைத் தமிழகத்திலுள்ள பதிப்பகங்கள் வெளியிட்டிருப்பின் அவை பற்றிய விவரங்களைப் பேரவைக்கு உடனடியாகத் தெரிவித்தால் அப்பதிப்பகங்களைப் பேரவையே அணுகி புத்தகங்களைப் பெறலாம். அல்லவெனில் அப்பதிப்பகத்தார் மூலமாகப் பேரவையின் தலைமையைப் படைப்பாளிகளே அணுகலாம்.

ஒவ்வொரு படைப்பிலும் குறைந்தபட்சம் 10 பிரதிகள் அனுப்பினால் திருவிழா முடிந்த பிறகு விற்பனைத் தொகையில் கழிவு போக மீதமுள்ள தொகையும் விற்பனையாகாத நூல் பிரதிகளும் உடனடியாகத் திருப்பிக் கொடுக்கப்படும்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

T. STALIN GUNASEKARAN
President, Makkal Sinthanai Peravai,
A-47, Sampath Nagar, Eode-638011 / Landline:04242269186.