Home Photo News ‘லியோ’ திரை விமர்சனம் : படம் சிறப்பு – ஆனால் வசூலில் ஜெயிலரை மிஞ்ச முடியுமா?

‘லியோ’ திரை விமர்சனம் : படம் சிறப்பு – ஆனால் வசூலில் ஜெயிலரை மிஞ்ச முடியுமா?

609
0
SHARE
Ad

படம் தொடங்கும்போதே – இந்த படத்தின் கதை ஆங்கிலத்தில் வெளிவந்த ‘ஹிஸ்டரி ஆஃப்  வயலன்ஸ்’ (History of Violence) என்ற திரைப்படத்தின் தழுவல்தான் என்பதை எழுத்துக்களால் திரையில் காண்பித்து விடுகிறார்கள்.

அதனால் இதுநாள் வரை லியோ, அந்த ஆங்கிலப் படத்தின் தழுவல்தானா என உலவி வந்த குழப்பங்கள் ரசிகர்களுக்கு இல்லாமல் படமும் தொடங்குகிறது.

இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் ஆங்கிலப் படத்தின் மையக்கருத்தை மட்டும் உருவி எடுத்து, இதுவரை காணாத சில காட்சிகளை திரைக்கதையில் சேர்த்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் படத்தின் உச்சகட்ட ஹைலைட் ‘ஹென்னா’ என்ற கழுதைப் புலி ரக விலங்கு. சுப்பிரமணி என பின்னர் பெயர் சூட்டப்படும் அந்த விலங்கு படத்தின் முதல் 10 நிமிடங்களில் நம்மை மிரள வைக்கிறது. இறுதி கிளைமாக்சிலும் ஒரு சாகசம் செய்கிறது. எல்லாமே கிராபிக்ஸ் காட்சிகள் தான் என்றாலும் அவ்வளவு தத்துரூபமாக – உண்மையிலேயே விஜய் ஒரு மிருகத்துடன் சண்டை போடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிராபிக்ஸ் செய்த குழுவினருக்கு தனி பாராட்டுக்கள்

திரைக்கதை என்ன?

பனி சூழ்ந்த வடநாட்டின் ஒரு சிறிய ஊரில் பதின்ம வயது மகன் – ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் மகள் – அழகான மனைவி திரிஷா – என ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் – அதாவது விஜய். அவருக்கு விலங்குகளுடன் பாசமும் நேசமும் உண்டு என்பதால் அந்த வட்டாரத்தின் காட்டிலாகா அதிகாரி கௌதம் மேனன் அவருக்கு நண்பர்.

ஊருக்குள் ஓர் அரசாங்க அதிகாரியை ஒரு கும்பல் வந்து கொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி செய்கிறது. கும்பலின் தலைவர்தான் முதல் வில்லன் இயக்குனர் மிஷ்கின்.

வந்த வேலையை முடித்து விட்டாலும் அந்த கும்பலுக்கு பணம் கிடைக்காமல் போக சொந்த தேவைக்கு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறார்கள். எதிர்பாராத விதமாக விஜய் நடத்தும் உணவகத்திற்கு வருகிறார்கள். அந்த கும்பலில் வித்தியாசமான கதாபாத்திரமாக வரும் நடன இயக்குனர் செண்டி மாஸ்டர் இன்னொரு வில்லன். விஜய்யின் உணவகத்தில் பணி செய்யும் இளம் பெண்ணையும் விஜய்யின் மகளையும் தவறான நோக்கத்துடன் அணுகுகிறார் சாண்டி மாஸ்டர்.

அதுவரை அமைதி காக்கும் விஜய் பொங்கி எழுந்து வில்லன்களை அதகளம் பண்ணி துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகிறார். அந்த சம்பவம் தேசியப் பத்திரிகைகளால் விஜய் படத்துடன் செய்தியாக வெளிவருகிறது. வழக்கு பதிவாகி, சுட்டுக் கொன்றாலும் தற்காப்புக்காகத்தான் அவர் அவ்வாறு செய்தார் என  விடுதலையாகிறார் விஜய்.

ஆனால் அதற்குப் பின்னர்தான் திருப்பம். அடுத்தடுத்து வில்லன் கூட்டம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அவரைத் தேடிக் கொண்டு அந்த ஊருக்கு வந்து சேர்கிறார்கள். ஏன் அவர்கள் விஜய்யைத் தேடுகிறார்கள்? விஜய்தான் லியோ என அவர்கள் கூறுகிறார்கள். நான் லியோ இல்லை என்கிறார் விஜய். யார் அந்த லியோ என்ற கேள்விகள் எழுகின்றன!

அவர்கள் தேடும் லியோ என்பவர்தான் விஜய்யா? அல்லது விஜய், தான் லியோ இல்லை என பொய் சொல்கிறாரா?

அவரைப்போல் இன்னொருவர் இருக்கிறாரா?

வில்லன்களுக்கும் விஜய்க்கும் தொடர்பு என்ன என்பதுதான் மீதிக்கதை.

லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பு

தனது முந்தைய படங்களை இருளிலும் அல்லது இருட்டான பின்னணிகளிலும் எடுத்துக்காட்டிய லோகேஷ் இந்த படத்தை காஷ்மீர் என்பதாலோ என்னவோ அழகாக வெளிச்சம் போட்டு பளிச்சென எடுத்துக்காட்டியிருக்கிறார். அவருக்கு பெரும் கை கொடுத்து உதவி இருப்பவர் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரஹம்சர். துல்லியமான ஒளிப்பதிவு.

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் சண்டைக் காட்சிகள். சொல்லத் தேவையில்லை. விக்ரம் படத்தில் அதிரடி காட்டிய அதே அன்பறிவு இரட்டையர்கள் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் வெளுத்துக்கட்டி இருக்கிறார்கள். அவ்வளவு நேர்த்தியான சண்டை காட்சிகள். கச்சிதமாக சண்டைக் காட்சிகளைத் தொகுத்த படத்தொகுப்பாளருக்கும் (எடிட்டிங்) பாதிப் பாராட்டுகள் செல்ல வேண்டும்.

அதிலும் இயல்பாக, ஒரு இடத்தில் சண்டை நடக்கும்போது அந்த இடத்தில் இருக்கும் பொருட்களை ஆயுதங்களாக மாற்றி சண்டை போடும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால் படம் முழுக்க ஏராளமான சண்டைக் காட்சிகள். நீளமான சண்டைக்காட்சிகள் என்பதுதான் சில சமயங்களில் போரடிக்கிறது. அதிலும் ஒரே இடத்தில் 50-100 பேர் சூழ்ந்து கொண்டு விஜயை தாக்க முற்படும்போது அவர் ஒற்றை ஆளாக சண்டையிடுவது நம்ப முடியாததாக இருக்கிறது.

படத்தின் இன்னொரு சுவாரசியம் பலரும் ஆரூடம் கூறியது போல லோகேஷ் கனகராஜின் முந்திய படங்களின் எல் சி யு எனப்படும் கதாபாத்திரங்களின் சேர்க்கை.  இந்தப் படத்திலும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் இரண்டு கதாபாத்திரங்கள் இணைந்து இருக்கிறார்கள். ஒருவர் கைதி படத்தில் இருந்து வருகிறார். இன்னொருவர் விக்ரம் படத்திலிருந்து வருகிறார். யார் அவர்கள்? அவர்கள் என்ன கதாபாத்திரம்? என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அழகு குறையாத திரிஷா

விஜயின் அழகான மனைவியாக வருகிறார் திரிஷா. அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக தோன்றுவது தான் – அவர் சினிமாவில் எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதன் ரகசியம். விஜய்யை விட திரிஷாவை மேலும் இளமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

படம் தொடங்கியது முதல் அவருக்கு விஜய்க்கும் காதல் காட்சிகளும் இல்லை நெருங்கி. கட்டிப்பிடிக்கும் உரசல்களும் இல்லை. ஆனால் அதை எல்லாம் தீர்க்கும் விதமாக ஒரு காட்சியில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கிறார்கள்.

வரிசையாக வரும் வில்லன்கள்…

படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் வில்லன்கள். இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின் என வில்லன்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வெறும் கொடூர வில்லன்களாக அவர்களை காட்டாமல் அவர்களுக்கு என சில உடல் மொழிகளோடு கதாபாத்திரத்தை அமைத்திருப்பதால் ரசிக்க முடிகிறது. உதாரணத்திற்கு மிஷ்கின்.

இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்பை எதற்கு நடிக்கக் கூட்டி வந்தார்களோ தெரியவில்லை. ஓரு காட்சியிலேயே சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

படம் முழுக்க ஒரு வித்தியாசமான மேக்கிங் என்பார்களே அதுபோல உருவாக்கத்தில் லோகேஷ் கனகராஜ் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இழுவை என்று பார்த்தால் படத்தின் சண்டைக் காட்சிகள் தான். ஆனால் அவையும் பொறி பறக்கும் விதத்தில் படு சுறுசுறுப்பாக அமைக்கப்பட்டிருப்பதால் பார்க்கும்படி அமைந்திருக்கின்றன.

படத்தின் இன்னொரு பாராட்டத்தக்க அம்சர் இசை. ஜெயிலர் அளவுக்கு அனிருத் பங்களிக்கவில்லை என்றாலும் சோடை போகாத பின்னணி இசையைத் தந்திருக்கிறார்.

விஜய் இத்தனை காட்சிகளில் சிகரெட் பிடிக்க வேண்டுமா? அர்ஜூனும் அந்த அளவுக்கு சிகரெட் பிடிக்க வேண்டுமா? எனக் கேட்கத் தோன்றுகிறது. விஜய்யைப் பார்க்க வரும் கூட்டம் அவர் சிகரெட் பிடிக்காவிட்டாலும் பார்க்கவரும் என்பதை அவரும் அவரை இயக்குபவர்களும் புரிந்து கொள்ளவேண்டும். தமிழ்நாட்டிலும் பல தளங்களில் இந்த சிகரெட் காட்சிகள் விவாதப் பொருளாகி இருக்கின்றன.

போதைப் பொருள் கடத்தல் – பாழடைந்த பெரிய கிடங்குகளில் அவற்றைப் பதுக்குவது – 100 பேர் கொண்ட குண்டர் கும்பல் – அவர்களுடன் கதாநாயகன் ஒற்றை ஆளாக சண்டை போடுவது – என மீண்டும் மீண்டும் இயக்குநர் லோகேஷ் ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். வெளியில் வரவேண்டும்.

விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்து மீண்டும் ஒரு வெற்றி கூட்டணி படைத்திருக்கிறார்கள். லியோ நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும். ஆனால் ஜெயிலர் படத்தை மிஞ்சுமா என்பதுதான் அடுத்த சில வாரங்களுக்கு தமிழ் பட ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்படப் போகும் கேள்வி!

-இரா.முத்தரசன்