கொழும்பு : இலங்கையின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அநுர குமார திசாநாயக்க, திடீர் பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும். இலங்கையில் கடைசியாக பொதுத் தேர்தல் 2020 ஆகஸ்டில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கடந்த வார இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கையர்கள் மார்க்சிய சாய்வு கொண்ட திசாநாயக்கவை தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் அவரது கூட்டணியான தேசிய மக்கள் கட்சிக்கு தற்போதைய நாடாளுமன்றத்தில் 225 இடங்களில் மூன்று இடங்கள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக மக்களின் புதிய அதிகாரத்தைப் பெற அவர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முற்பட்டிருக்கிறார்.