பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பலத்த சத்தங்களுடன் தீப்பிழம்புகளுடன் கூடிய புகைமூட்டம் பெய்ரூட்டைச் சூழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கு முன்னர் 2006-ஆம் ஆண்டில்தான் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது முதன் முறையாக இன்னொரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் மடிந்தனர். ஏறத்தாழ 1 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். புதன்கிழமை (அக்டோபர் 2) நடந்த போரில் தனது இராணுவத் தரப்பில் 8 வீரர்கள் மட்டுமே மரணமடைந்ததாக இஸ்ரேல் கூறியது.
இஸ்ரேலை அமெரிக்கா தற்காக்கும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். எனினும் இஸ்ரேல் ஈரானை நேரடியாகத் தற்காக்கும் முயற்சிகளை ஆதரிக்கவில்லை எனக் கூறினார்.
இஸ்ரேலின் முக்கிய இராணுவப் பகுதிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) ஈரான் வரலாறு காணாத அளவில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இதற்கிடையில் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு.
ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி முறியடித்தது. அதற்கு அமெரிக்காவும் ஒத்துழைத்தது. எனினும் ஓர் இராணுவ விமானப் படைத் தளம் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஈரானிய இராணுவமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.
தென் லெபனான் வட்டாரத்தில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்கள் நடத்தி அங்கு செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத மையங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது.
இந்த அண்மையத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அனைத்துலக நாடுகள் பரபரப்புடன் காத்திருக்கின்றன.