சென்னை : பொதுவாக தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சுமார் ஆறு மாதம் இருக்கும்போதுதான் அரசியல் களம் சூடு பிடிக்கும். ஆனால், இந்த முறை சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்போதே பரபரப்புகள் தொற்றிக் கொண்டுள்ளன.
அந்த அளவுக்கு தமிழ் நாடு அரசியல் களம் மாற்றம் கண்டிருக்கிறது.
இந்நிலையில் கௌதமிக்கு அதிமுகவில் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவின் பிரச்சார வியூகங்கள் இனி சூடுபிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
நேற்று திங்கட்கிழமை முதல் கௌதமி அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அதிமுக அறிக்கை தெரிவித்துள்ளது.
எடப்பாடி கௌதமியை இந்தப் பொறுப்புக்கு நியமித்திருப்பதைத் தொடர்ந்து பிரபல நடிகையான அவர் தனது பிரச்சாரத்தால் வலிமைப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் கமல்ஹாசனுடன் மனைவியாக வாழ்ந்தவர் கௌதமி. எனினும் கமலின் மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதற்கு முன்பாகவே கமலிடம் இருந்து அவர் பிரிந்துவிட்டார். தொடர்ந்து பாஜகவில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு அதிமுகவில் வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கட்சியில் நிலவும் பிளவுகளுக்கு மத்தியில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.