Home Photo News “முருகு சுப்பிரமணியன் – புதிய சமுதாயம் அனுபவங்கள்” – முருகு நூற்றாண்டு விழாவில் இரா.முத்தரசன் உரை

“முருகு சுப்பிரமணியன் – புதிய சமுதாயம் அனுபவங்கள்” – முருகு நூற்றாண்டு விழாவில் இரா.முத்தரசன் உரை

213
0
SHARE
Ad
அமரர் முருகு சுப்பிரமணியன்

(மலேசியாவின் பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்த அமரர் முருகு சுப்பிரமணியன் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கோலாலம்பூர், செந்தூல் செட்டியார்கள் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ‘முருகு சுப்பிரமணியன் – புதிய சமுதாயம் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் செல்லியல் இணைய ஊடக நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

#TamilSchoolmychoice

நான் ஐந்தாம் படிவம் முடித்து விட்டு – அப்போதைய எம்சிஇ தேர்வுகள் (இப்போதைய எஸ்பிஎம் தேர்வுகளுக்கு நிகர்) எழுதி விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த காலகட்டம்.

எனக்குள் தமிழ் மொழி மீதான ஆர்வமும், தமிழ் இலக்கியங்கள் மீதான காதலும், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டம். ஓர் எழுத்தாளனாக தணியாத தாகத்தோடு நான் உருவெடுத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. செந்தூலிலுள்ள முத்தமிழ்ப் படிப்பகத்தில் அமர்ந்து கொண்டும், அங்கிருந்து நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றும், தமிழ் மொழியின்  முக்கியமான எழுத்தோவியங்களை படித்து மகிழ்ந்த அற்புதமான நாட்கள் அவை.

முருகுவுடனான முதல் சந்திப்பு

முருகு நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்திய இரா.முத்தரசனுக்கு சிறப்பு செய்யும் முருகுவின் புதல்வர் பாண்டியன் தம்பதியர்

அப்போது முருகு அவர்களை ஆசிரியராகக் கொண்டு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவந்த ’புதிய சமுதாயம்’ இதழில் உதவி ஆசிரியர்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். விண்ணப்பித்தேன். வரச் சொன்னார்கள்.

தமிழ் நேசன் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி முருகு அவர்கள் புதிய சமுதாயம் இதழைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். அதன் அலுவலகம் அப்போது ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானிலுள்ள சோத்திர்மால் ஜவுளிக் கடை அமைந்திருந்த கட்டடத்தின் மேலே 2-வது மாடியில் அமைந்திருந்தது.

முருகு அவர்களே எனக்கு நேர்முகத் தேர்வு நடத்தினார். அதுதான் அவரை நான் முதன் முதலில் சந்தித்தது.

நேர்முகத் தேர்வு முடிந்ததும், நீங்கள் பொருத்தமானவராகத் தெரிகிறீர்கள். உடனடியாக வேலைக்குச் சேரலாம் என்றார். நானும் ஒரு பத்திரிகையாளராகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் புதிய சமுதாயத்தில் இணைந்தேன்.

உண்மையில் அப்போது நான் முருகு அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பத்திரிகைத் தொழிலைப் பற்றியும் நான் தெரிந்திருக்கவில்லை. அவர் தமிழ் நேசனில் ஆசிரியராக இருந்தார் என்ற தகவல்களைத் தவிர அவரைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.

எனக்கு மாதச் சம்பளம் 120 ரிங்கிட் என நிர்ணயித்தார்கள். 3 மாதங்கள் கழித்து எனது பணிகள் பிடித்திருந்தால் சம்பளம் 140 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என முருகு கூறினார்.

அதே போல நான் நல்ல முறையில் பணியாற்றியதால் 3 மாதங்கள் கழித்து 140 ரிங்கிட் சம்பளம் எனக்கு வழங்கப்பட்டது.

இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அன்று அதனை மிகச்சிறிய சம்பளமாகத்தான் நான் கருதினேன்.

ஆனால் இன்று சுமார் 45 ஆண்டுகள் கழித்து, முருகு என்ற அந்த மாமனிதரின் நூற்றாண்டு விழாவில் உங்கள் முன் நின்று உரையாற்றும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்து – இன்று என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருப்பது – அன்று முருகுவின் கீழ் பணிபுரிந்து நான் பெற்ற அந்த சிறிய சம்பளம்தான் என்பதைப் பெருமையுடனும் பெருமகிழ்ச்சியுடனும் குறிப்பிட விரும்புகிறேன்.

புதிய சமுதாயத்தில் நான் நுழைந்தபோது, பாதாசன் துணையாசிரியராக இருந்தார். கவிஞர் நகைச்சுவைப் பித்தன் என்ற ஆறுமுகம் மற்றொரு துணை ஆசிரியர். உதவி ஆசிரியராக ராமதாஸ் மனோகரன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஓவியர்களாக, சந்திரன் அமரர் வேலவன் இருவரும் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் பெரும்புகழ் பெற்ற ஓவியராக வளர்ந்த சந்திரன் இன்று நம்முடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். முருகுவைப் பற்றிய தனது கருத்துகள் அடங்கிய காணொலி ஒன்றையும் வழங்கியுள்ளார். அதனை நீங்கள் முருகு இணையத் தளத்தில் காணலாம்.

ஓவியர் சந்திரனுக்கு வாய்ப்பு தந்த முருகு

தமிழ்நாட்டிலிருந்த ஓவியக் கல்லூரியில் கல்வியும் பயிற்சியும் பெற்று நாடு திரும்பிய இளைஞரான சந்திரனுக்கு புதிய சமுதாயம் பத்திரிக்கையில் ஓவியங்கள் வரைய வாய்ப்பு தந்தவர் முருகு சுப்பிரமணியன். இன்று சந்திரன் நாட்டின் பிரபல முன்னணி ஓவியர்களில் ஒருவராக திகழ்கிறார்.  பல அழகான பிரமிப்பூட்டும் ஓவியங்களை படைத்தவர் அவர்.  அவருக்கான ஆரம்ப கால வாய்ப்புகளை தன் பத்திரிகையின்வழி வழங்கியவர் முருகு சுப்பிரமணியன்.

அப்போதெல்லாம் கணினி இல்லையென்பதால் அச்சுக் கோர்ப்பவர்கள் கொம்போசிங் குழுவினர் என அழைக்கப்படுபவர்கள், தமிழ்நேசனில் இருந்து பகுதி நேரமாக வந்து வேலை செய்தனர்.

திரு செல்வம், மணி, தோமஸ், ஆகியோரைக் கொண்ட அந்தக் குழுவுக்கு தலைமையேற்றவர் திரு வாசு அவர்கள். தமிழ் நேசனில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவரும் இங்கே நம்முடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த இடத்தில் இன்னொரு சுவையான தகவலையும் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும். இன்று கம்போசிங் முறை இல்லை. மாறாக முற்றும் கணினியின் தமிழ் அச்சு ஊடகங்கள் செயல்படுகின்றன. அந்த நடைமுறையை மாற்றியமைத்து முதன் முதலில் தமிழ் ஓசையில், தமிழ் ஓசை இயக்குநர் வாரியத் தலைவராக இருந்த மறைந்த திரு ரேடியோ பாலா  அவர்களின் நல்லாசியுடனும் திரு இராஜகுமாரன் திரு ஆதி குமணன் ஆகியோரின் ஆதரவுடனும் செயல்படுத்தியவர் திரு முத்து நெடுமாறன் அவர்கள். அவரும் அவரின் தந்தையார் முரசு நெடுமாறனுடன் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்திருக்கிறார்.

புதிய சமுதாயத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் பத்திரிக்கை உலக வாழ்க்கையின் முதல் நுழைவும், முருகு.சுப்பிரமணியன் அவர்களுடனான குறுகிய கால இலக்கியப் பயணமும், நெருக்கமும் புதிய சமுதாயத்தில்தான் தொடங்கியது.

முருகுவின் பெருமைகள் அறிந்தேன்

புதிய சமுதாயம் இதழில் பணியாற்றிய ஓராண்டு காலத்தில் அவரின் பெருமைகளையும் சிறப்புகளையும் நான் நேரடியாக கண்டு கொண்டேன். அவரின் கடந்த கால சாதனைகளையும் அறிந்தேன். அவர் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கத் தொடங்கியது.

அவரின் சிறப்பியல்புகளையும், குணாதிசயங்களையும் நேரில் உடனிருந்து அனுபவிக்கும் அரிய வாய்ப்பையும் பெற்றேன்.

அவருடனான அந்த சம்பவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற ஆவல் அண்மையக் காலமாக என் மனதில் குடிகொண்டிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் முருகுவின் புதல்வர் டாக்டர் கலைமணி அவர்களுடன் பேசி, முருகுவின் பிறந்த மறைந்த தேதிகளைத் தெரிந்து கொண்டு, அவர் மறைந்த நாளான 10 ஏப்ரல் 1982 நாளை முன்னிட்டு அன்றைய தினத்தில் முருகு அவர்களுடனான சம்பவங்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினேன். பின்னர் அந்தக் கட்டுரையின் விரிவாக்கம் செல்லியல் இணைய ஊடகத்திலும் வெளிவந்தது.

அந்த கட்டுரை வெளிவந்த சமயத்தில்தான் அவரின் பிறந்த வருடத்தைக் கணக்கிடும்போது இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. அந்தப் புள்ளியிலிருந்து நானும் முருகுவின் புதல்வர் டாக்டர் கலைமணியும் தொடக்கக் கட்ட விவாதங்களைத் தொடங்கினோம். அவரின் குடும்பத்தினரும் முருகுவின் நெருங்கிய உறவினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்தது

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவரானவர் முருகு அவர்கள். எனவே எழுத்தாளர் சங்கத்தையும் இந்த முயற்சியில் இணை ஏற்பாட்டாளர்களாக இணைய கோரிக்கை விடுத்தோம். சங்கத்தின் சார்பில் திரு ராஜேந்திரனும் நடப்புத் தலைவர் திரு மோகனன் பெருமாளும் எங்களுடன் ஏற்பாட்டுக் குழுவில் இணைந்தனர். தமிழ் நேசனில் முருகுவின் கீழ் பணிபுரிந்தவரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு சைமனும் ஏற்பாட்டுக் குழுவில் இணைந்தார்.

நானும் இந்த ஏற்பாட்டுக் குழுவின் செயலாளராக என்னால் இயன்ற பணிகளை வழங்கியிருக்கிறேன். பின்னர் ராமதாஸ் மனோகரன், சீராகி என்ற ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முருகுவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து தங்களின் பங்களிப்புகளை வழங்கினர்.

இப்படித்தான் இதோ உங்கள் முன் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த முருகு நூற்றாண்டு விழா கருக் கொண்டு -உருக் கொண்டு – உங்கள் முன் இத்தனை பிரம்மாண்டமான அளவில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

புதிய சமுதாய சம்பவங்கள்

புதிய சமுதாயத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் என் வாழ்க்கையில் இன்றும் -என்றும் – மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நான் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தபோது 1978-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் பொதுத் தேர்தல் வந்தது. பொதுத் தேர்தல் முடிந்ததும் வெளிவந்த புதிய சமுதாயம் இதழில் மஇகாவின் இந்திய  வேட்பாளர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் முருகு. அவரே வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் கருத்துகளைக் கேட்க தொலைபேசியில் அழைத்தார்.

அந்தத் தேர்தலில் டாமன்சாரா தொகுதியில் போட்டியிட்ட மஇகாவின் தலைமைச் செயலாளரும், துணை அமைச்சருமான (டான்ஶ்ரீ ) சி.சுப்பிரமணியம் தோல்வியடைந்திருந்தார். அவரையும் பேட்டி காண தொலைபேசியில் அழைத்தார் முருகு. அவரின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, “உங்களின் அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்து சொல்லுங்கள் புதிய சமுதாயத்தில் வெளியிடுகிறோம்” என்றார் முருகு. சுப்ரா சொல்லத் தொடங்கியவுடன் அலுவலகத்தில் இருந்த என்னை அழைத்து சுப்ரா சொல்வதை அப்படியே தொலைபேசியில் கேட்டு எழுதிக் கொள்ளுங்கள் என்றார் முருகு.

சுப்ராவிடம் என் பெயரை சொல்லிவிட்டு நான் அவர் சொல்வதை தொலைபேசியில் கூறியதைக் கேட்டு எழுதத் தொடங்கினேன்.

அதுதான் சுப்ராவுடனான என் வாழ்க்கையின் முதல் தொலைபேசி உரையாடல். அவருடனான முதல் நேரடி உரையாடலும் கூட!

அதற்குப் பின்னர் அவருக்கு அறிமுகமாகி, சுமார் 40 ஆண்டுகாலம் நெருங்கிய அரசியல் பயணத்தை அவருடன் நான் கொண்டிருந்தாலும், நான் முதன் முதலில் அவருடன் தொலைபேசியில் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர் வாசலைத் திறந்து விட்டவர் முருகுதான் என்ற மறக்க முடியாத நினைவையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மாதப் பத்திரிகையாக மாறிய புதிய சமுதாயம்

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த புதிய சமுதாயம் பத்திரிக்கை நான் பணியில் சேர்ந்த ஓராண்டுக்கு பின்னர் மாதம் ஒரு முறை பத்திரிக்கையாக – செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் – மாற்றம் கண்டது.

அதன் காரணமாக. அங்கு முன்பு போல் உதவி ஆசிரியர்கள் அதிக அளவில் தேவைப்படவில்லை.  அதன் காரணமாக நான் புதிய சமுதாயத்தில் இருந்து விலகி வேறு பணிக்குச் செல்ல நேர்ந்தது. என்னை அழைத்து முருகு அவர்கள் நெகிழ்ச்சியுடன் புதிய சமுதாயம் பத்திரிகை நிலைமை விளக்கி வேறு வேலை வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறிய அந்தக் காட்சி இன்னும் அழியாமல் என் மனதில் பதிந்திருக்கிறது.

1978-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அங்கிருந்து நான் விலகுவதற்கு முன்னால், மீண்டும் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தேன். அப்போது அங்கு அடிக்கடி வந்த நண்பர் ஒருவர் ‘அவர்தான் நாய்சாப் கின்னஸ் டாவுட் உங்களுக்கு நல்லது’ என வானொலி விளம்பரத்தில் குரல் வழங்கியவர். அவர் கூறினார் “ சுப்ரா டாமன்சாரா தேர்தலில் தோல்வியடைந்ததும் மஇகா தலைமையகத்தில் தலைமைச் செயலாளராக இருந்து கொண்டு அதிக அளவில் பொதுமக்களைச் சந்திக்கிறாராம்.  அவரை அழைத்து வேலைவாய்ப்பு கேளுங்களேன்” என்றார்.

நானும் சரி முயற்சி செய்து பார்ப்போமே என – மஇகா தலைமையகத்தின் தொலைபேசிக்கு அழைத்து – ‘திரு.சுப்ராவிடம் பேச வேண்டும் என்றேன். அப்போது அவர் துணையமைச்சராக பணியாற்றியிருந்தாலும்  டத்தோகூட இல்லை. அவரை எனக்கு எந்தவிதத்திலும் தெரியாது.

ஆச்சரியமாக அவரை தொலைபேசியில் இணைத்தார்கள். “நான் உங்களைப் பார்க்க வேண்டும்” என்றேன். அவரும் “சரி எதிர்வரும் திங்கட்கிழமை வாருங்கள். என்ன விஷயமாகப் பார்க்க விரும்புகிறீர்கள்” என்றார். எனது வேலைவாய்ப்பு சம்பந்தமாக என்றேன்.

அந்தக் குறிப்பிட்ட நாளில் அவரைச் சந்தித்தேன். நேர்காணல் நடத்தினார்கள். பின்னர் புதிய சமுதாயத்திலிருந்து விலகியதும் ஒரிரு மாதங்கள் கழித்து மஇகா தலைமையகத்தில் வேலை இருக்கிறது செய்ய விருப்பமா என்றார்கள். சம்பளம் 250 ரிங்கிட் என்றார்கள். சேர்ந்தேன்.

என்வாழ்க்கையின் திசைகளும் மாறின.

முருகுவின் சிறப்புகள்

முருகுவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் எதற்காகவும் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்துப் பணி அவருடையது. ஒரு பத்திரிகையாளராக – அதுவும் அப்போது முன்னணியில் இருந்த தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியர் என்ற முறையில் – அவருக்கு எல்லா இந்தியத் தலைவர்களுடனும், அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஆனால், அவர் எதற்காகவும், யாரையும் நாடிச் சென்றதாக நான் அறிந்ததில்லை.

புதிய சமுதாயம் பத்திரிகை நடத்தும்போதும் பத்திரிகை விற்பனைக்காகவோ, வர்த்தக ரீதியாகவோ, அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. சமுதாய அக்கறையோடு மக்களுக்கு நலன் பயக்கும் கட்டுரைகள், செய்திகள் மட்டுமே தன் பத்திரிக்கையில் வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

சினிமா குறித்த செய்திகள் சில, புதிய சமுதாயம் பத்திரிகையில் வெளிவந்தாலும் சினிமா செய்திகளின் ஆக்கிரமிப்போ – சினிமாவின் கவர்ச்சியோ – தன் பத்திரிக்கையில் வெளிவரக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார்.

திருக்குறளுக்கு விளக்கக் கட்டுரை எழுதினார்…

முருகுவுக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள். எப்போதும் தன் மேசையில் திருக்குறளை வைத்திருப்பார். திருக்குறளுக்கு விளக்கக் கட்டுரைகளை அவர் ஒவ்வொரு புதிய சமுதாயம் இதழிலும் தொடர்ச்சியாக மிகுந்த விருப்பத்துடன் எழுதி வந்தார்.

வாய்மொழியாக அவர் சொல்லச் சொல்ல பிறர் எழுதிக் கொடுப்பது அவரின் பாணி. அந்த வகையில்  அந்த திருக்குறள் கட்டுரைகளை, நான் அங்கு பணியாற்றிய காலத்தில் என்னை அழைத்து எழுதச் சொல்வார். தன் திருக்குறள் சிந்தனைகளை அடுக்கடுக்கான வார்த்தைப் பிரயோகங்களின் வழி தங்கு தடையின்றி, இடைநிறுத்தம் இன்றி வழங்குவார். அலுவலகத்திலும், இல்லத்திலும் எப்போது, எங்கு, வசதியோ அங்கேயே அமர்ந்து, எந்த மேற்கோள்களையும், மற்ற நூல்களையும் எடுத்துப் பார்க்காமல், முழுக்க முழுக்க தன் சிந்தனையிலேயே அந்தக் கட்டுரைகளை அவர் படைப்பார்.

ஆசிரியருக்கு, திறந்தவெளியில் இயற்கைச் சூழலில் அமர்ந்து கொண்டு எழுதுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதன் காரணமாக அவர் அடிக்கடி காரில் என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த லேக் கார்டன் செல்வார்.

லேக் கார்டனில் அமர்ந்து கொண்டு, அவர் சொல்ல சொல்ல திருக்குறள் குறித்த கட்டுரைகள் எழுதிய இனிய காட்சிகள் நினைவில் வந்து மறைகின்றன. அந்த சமயங்களில் அங்கு யாராவது ஐஸ்கிரீம் விற்பவர்கள் வந்தால், ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே – எனக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு – தன் எழுத்துப் பணியைத் தொடர்வார்.

மெர்டேக்கா தினத்தில் பிறந்தவர்களை ஒருங்கிணைத்தார்…

1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 – நமது நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது ஒரு புதுமையான திட்டத்தை அவர் செயல்படுத்தினார். அதன்படி 1957-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிறந்த இந்தியர்களை புதிய சமுதாயத்திற்கு விண்ணப்பிக்கச் சொல்லி, அவர்களுக்காக 2 நாட்கள் கோலாலம்பூர் சுற்றுலா ஏற்பாடு செய்தார். சுமார் 15 முதல் 20 பேர் வரை அந்தத் திட்டத்தில் இணைந்து நாட்டின் பல திசைகளில் இருந்து கோலாலம்பூர் வந்தனர். புதிய சமுதாயம்  என்ற முறையில் நாங்களும் அந்தச் சுற்றுலாவில் கலந்து கொண்டோம்.

அந்தச் சுற்றுலா நடந்த சமயத்தில் துன் சம்பந்தன் (அப்போது அவர் மஇகா தேசியத் தலைவர் பதவியை வகிக்கவில்லை – ஒற்றுமைத் துறை வாரியத் தலைவராக இருந்தார்) தன் இல்லத்தில் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில், மெர்டேக்கா தினத்தன்று பிறந்தவர்களை அழைத்துச் சென்று சம்பந்தனுக்கு அறிமுகப்படுத்தினார். நாங்கள் யாரும் எதிர்பாராத விதமாக – துன் சம்பந்தனின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொள்ள அப்போது நமது முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அங்கு வந்ததும். அந்த உபசரிப்பில் எங்களுடன் பங்கு கொண்டதும் மறக்க முடியாத அனுபவம்!

புதிய சமுதாயத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் ஆசிரியர் முருகுவுடனான பொது நிகழ்ச்சி சந்திப்புகள் தொடர்ந்தன. அவருடைய புதல்வர்கள் குடும்பத்தினருடனான நட்பும் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நூற்றாண்டு விழா ஏற்பாட்டில் முருகுவின் குடும்பத்தினருடன் மேலும் நெருக்கமாக இணைந்து நான் பணியாற்றும் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட்டது.

நான் புதிய சமுதாயம் இதழில் இருந்து விலகிய 4 ஆண்டுகளிலேயே துரதிஷ்டவசமாக 1982-இல் அவர் காலமானார்.

முருகு சுப்பிரமணியத்தின் இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பளித்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு நன்றி