Home நாடு 1எம்டிபி வழக்கு : நஜிப்பின் எதிர்பார்ப்புகள் கலைந்தன! எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்வாதம் புரிய நீதிபதி உத்தரவு!

1எம்டிபி வழக்கு : நஜிப்பின் எதிர்பார்ப்புகள் கலைந்தன! எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்வாதம் புரிய நீதிபதி உத்தரவு!

104
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏற்கனவே, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது 1எம்டிபி பணம் முறைகேடாகக் கையாளப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதில் அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்வாதம் புரிய வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுரா இன்று புதன்கிழமை (அக்டோபர் 30) உத்தரவிட்டார்.

நஜிப், 1 எம்டிபி (1MDB) நிதிகளின் நிலைமையை விசாரிக்க தவறவிட்டதால் “பொறுப்புணர்வற்றவராக” இருந்தார் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுரா தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வங்கியில் பதிவு செய்யப்பட்ட 681 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் நஜிப்பின் கணக்கில் திரும்ப செலுத்தப்பட்ட 620 மில்லியன் அமெரிக்க டாலர் போன்ற பெரும் தொகைகளைக் கருத்தில் கொண்டால், அவை சட்டவிரோத நடவடிக்கையின் விளைவு என்பதை கண்டறிந்து அதற்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு நஜிப்புக்கு இருந்தது. ஆனால் அதைச் செய்ய நஜிப் தவறிவிட்டார் என நீதிபதி சுட்டிக் காட்டினார்.

நீதிபதி தனது 41 பக்க தீர்ப்பில் மேற்கண்ட விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

71 வயதான நஜிப், 1எம்டிபி நிதிகளைப் பெற்றதிலும் – மொத்தம் 2.3 பில்லியன் சலுகை பெறுவதற்கும் –  தனது பதவியைப் பயன்படுத்தினார் என சுமத்தப்பட்டிருக்கும் 4 குற்றச்சாட்டுகளுக்கும், மற்றும் அதே நிதிகளில் 21 கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றங்களுக்கும் நஜீப் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிபதி செக்குவரா உத்தரவிட்டார்.

“அந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பெற்ற நிதிகளில், பல காசோலைகள் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நஜிப், பல நபர்களுக்கும் பல நிறுவனங்களுக்கும் பணம் செலுத்தியுள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

முன்னாள் பேங்க் நெகாரா (மத்திய வங்கி) ஆளுனர் டான்ஸ்ரீ செத்தி அக்தார்  குற்றவாளி எந்த தவறும் செய்யவில்லை என்று நஜிப் அவரிடம் அறிவிக்க வேண்டும் என்று கோரியதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நஜிப்பின் 9694 வங்கிக் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்ட 680 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை குறித்தும் அரசாங்கத் தரப்பு சாட்சிகள் போதுமான சாட்சியங்களை வழங்கியுள்ளனர் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இன்று நஜிப் எதிர்வாதம் புரிய அழைக்கப்படுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள அவரின் ஆதரவாளர்களும் அம்னோவினரும் நீதிமன்றத்தின் முன் திரண்டிருந்தனர்.