ஷா ஆலாம் : கடந்த ஆண்டு 400 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை பதிவு செய்த மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளது என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அமிருடின், சிலாங்கூர் அரசுப் பணியாளர்கள் மாநிலத்தை மேம்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு மாத சம்பள ஊக்குவிப்புத் தொகையை (போனஸ்) பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த ஊக்குவிப்புத் தொகை இரண்டு பகுதிகளாக வழங்கப்படும். முதல் பகுதி டிசம்பர் 31-ஆம் தேதியும், இரண்டாவது பகுதி அடுத்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியும் ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து வழங்கப்படும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் கடந்த ஆண்டு பல சாதனைகளை படைத்துள்ளது, இதில் மலேசியாவில் RM400 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கையை பதிவு செய்த முதல் மாநிலம் என்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.
“அது தவிர, வருவாய் மதிப்பு மற்றும் சேகரிப்பு ஆண்டுக்கு ஆண்டு இலக்கை தாண்டி, RM751 மில்லியன் அதிகரித்து, RM4.36 பில்லியனாக உள்ளது,” என்றும் மந்திரி பெசார் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கம் 2025 ஆண்டுக்கான RM3 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது. RM1.7 பில்லியன் (56.7%) இயக்கச் செலவினங்களுக்காகவும், RM1.3 பில்லியன் (43.3%) வளர்ச்சிச் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவுசெலவுத் திட்டம் 2024 இன் RM2.53 பில்லியன் வரவுசெலவுத் திட்டத்தை விட அதிகமாகும்.