Home Photo News அன்வார் இப்ராகிமின் ‘குறள்களும்’ – சரவணனின் ‘குரலும்’

அன்வார் இப்ராகிமின் ‘குறள்களும்’ – சரவணனின் ‘குரலும்’

217
0
SHARE
Ad

(பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனதுரைகளில் அவ்வப்போது திருக்குறள்களை மேற்கோள் காட்டுவது வழக்கம். அண்மையில் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராகச் சமர்ப்பித்தபோதும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார் அன்வார் இப்ராகிம். அவரின் திருக்குறள் மேற்கோள்களுக்கு மாறுபட்ட கருத்தாக மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியது என்ன? விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையக் காலமாக திருக்குறள் மீது தீராக் காதல் கொண்டு, எங்கே உரை நிகழ்த்தினாலும், ஏதாவது ஒரு பொருத்தமான திருக்குறளை உச்சரிப்பது வழக்கம். நம் நாட்டுப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் திருக்குறளை மதித்து, அவ்வப்போது தனது உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.

பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், கடந்த அக்டோபர் 2023-ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போது பின்வரும் குறளை அன்வார் மேற்கொள் காட்டினார்:

#TamilSchoolmychoice

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இந்தத் திருக்குறளுக்கான மு.வரதராசனார் விளக்க உரை:

“பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் (அல்லது அரசு).”

இந்த விளக்கத்தையும் பொருத்தமாக சுட்டிக் காட்டிய அன்வார், அந்த அடிப்படையில்தான் 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் அமைந்திருப்பதாக கூறினார்.

தீபாவளி வாழ்த்துச் செய்தியிலும்
திருக்குறளை இணைத்த அன்வார்

கடந்த 2023-ஆம் ஆண்டு வழங்கிய தனது தீபாவாளி வாழ்த்துச் செய்தியிலும் திருக்குறள் ஒன்றை அன்வார் மேற்கோள் காட்டினார்:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல.

– என்பதுதான் பிரதமர் மேற்கோள் காட்டிய அந்தக் குறள்.

“அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை” – என்பது இந்தக் குறளுக்கு மு.வரதராசனார் தந்திருக்கும் விளக்கம்.

இந்தத் திருக்குறளை தன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட அன்வார் அதற்கேற்ப அனைவரும் மற்றவர்களுக்கு நற்பணிகள் செய்து இன்பம் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்ட உரையிலும் திருக்குறள்

2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி (2024) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது அன்வார் மீண்டும் ஒரு குறளைப் பொருத்தமாக மேற்கோள் காட்டினார்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

“மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்” – என்பது இந்தக் குறளுக்கான விளக்கம்.

இந்தக் குறளையும் தனது வரவு செலவுத் திட்டத்திற்கான உரையில் பொருத்தமாக இணைத்துக் கூறினார் அன்வார்.

அன்வார் இவ்வாறு தன் உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுவது பாராட்டப்பட்டாலும், இந்த ஆண்டுக்கான அன்வாரின் வரவு செலவுத் திட்ட உரைக்குப் பின்னர் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் – தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் – டத்தோஸ்ரீ எம்.சரவணன் விடுத்த  ஒரு வாசகம்தான் பலரையும் கவர்ந்தது.

அன்வார் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த அதே நாளில் சரவணன் அந்த வாசகத்தைத் தன் கைப்பட எழுதி தன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டார். அந்த வாசகம் இதுதான்:

“எப்போதும் எங்களுக்காக ‘குரல்’ கொடுப்பாய்
என நம்பி வாக்களித்தோம்.
நீயோ எப்போதும் எங்களுக்காக
‘குறள்’ மட்டுமே கொடுக்கிறாய்.
(DS
MS 18/10/2024)

 

பிரதமரின் வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்காக 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறித்து பரவலான கண்டனங்கள் நாடெங்கும் எழுந்த சூழ்நிலையில், சரவணனின் பொருத்தமான இந்த வாசகமும் அதன் உட்பொருளும் பலரையும் கவர்ந்தது.

திருக்குறள் சிரிப்புக்கு உரியதல்ல!

கடந்த திங்கட்கிழமை (4 நவம்பர் 2024) வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதங்களின்போது உரையாற்றும்போது ஆணித்தரமாக சில கருத்துகளைத் தன் உரையில் எடுத்துரைத்தார் சரவணன்.

ஒற்றுமை-மடானி-அரசாங்கத்தின் ஓர் அங்கமாக மஇகா தொடர்ந்து பங்கு வகித்தாலும் அவ்வப்போது, இந்தியர்கள் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டவும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் சரவணன் எப்போதுமே தயங்கியதில்லை.

அந்த வகையில்தான் வரவு செலவுத் திட்டத்தில் மித்ராவுக்கென 100 மில்லியனும் தெக்குள் கடனுதவித் திட்டத்திற்கான 30 மில்லியனும் போதாது என நாடாளுமன்றத்தில் கூறினார் சரவணன். இதர திட்டங்களிலும் இந்தியர்களுக்குப் பயனுண்டு எனக் கூறப்பட்டாலும், எந்த அளவுக்கு இது சாத்தியம் என்பது கேள்விக் குறிதான் எனவும் குறிப்பிட்டார் சரவணன். இந்திய சமூகத்திற்கென கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இந்திய சமூகத்திற்கான புளூபிரிண்ட் என்ற திட்ட வரைவினை செயல்படுத்த வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்தார்.

அன்வார் இப்ராகிமின் திருக்குறள் மேற்கோள்கள் குறித்து அதே உரையில் சரவணன் கூறிய கருத்துகள்தான் அவர் உரையின் உச்சகட்டம்.

“திருக்குறள் என்பது தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சமூகமும் உலக மக்களும் போற்றும் உலகப் பொதுமறை நூலாகும். அன்வார் அதன் மதிப்பை உணர்ந்துதான் – திருக்குறள்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் இந்திய சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும்தான் – அவ்வப்போது திருக்குறளை தன் உரைகளில் குறிப்பிடுகிறார். ஆனால், அவர் திருக்குறளைக் குறிப்பிடும் போதெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பொலி கேட்பதைப் பார்க்கிறேன். திருக்குறள் நகைப்புக்கோ, கேலிக்கோ உரியதல்ல. மாறாக அன்வார், கன்பூசியஸ் போன்ற அறிஞர்களின் வாசகங்களைக் கூறும்போது நாடாளுமன்ற அவையில் சிரிப்பொலி கேட்பதில்லை. எனவே, பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும்போது யாரும் சிரிக்காமல் திருக்குறளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என சரவணன் கேட்டுக் கொண்டார்.

இப்படியாக அன்வார் அவ்வப்போது ‘குறள்’ மேற்கோள் காட்டுவதும் சரவணன் அதற்கு பதில் ‘குரல்’ கொடுப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

-இரா.முத்தரசன்