Home Photo News செல்லினத்தில் புதிய மேம்பாடுகள்

செல்லினத்தில் புதிய மேம்பாடுகள்

130
0
SHARE
Ad

கையடக்கக் கருவிகளில் தமிழ்மொழியின் உள்ளீடுகளுக்கான முக்கியத் தளமாகச் செயல்பட்டு வரும் ஆண்டிராய்டுக்கான செல்லினம் குறுஞ்செயலியில்  நீண்ட நாள்களுக்குப் பிறகு  பல புதிய மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்தப் புதிய பதிப்பு கூகுளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, கடந்த 18 டிசம்பர் 2024 முதல் பொதுப் பயனீட்டுக்காக கூகுள் பிளேயில் (Google Play) வெளியிடப்பட்டது. ஐபோன்/ஐபேட்டுக்கான பதிப்பிலும் ஒரு வழுநீக்கம் (Bug removal) செய்துள்ளோம். 18 டிசம்பர் 2024-இல் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் (Apple App Store) இது பதிப்பிக்கப்பட்டது.

ஆண்டிராய்டு செல்லினத்தின் புதிய பதிப்பு

ஆண்டிராய்டு செல்லினத்தின் முக்கியமான மேம்பாடுகள்:

  • ஆண்டிராய்டின் அண்மைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பித்தல்;
  • முதன்மைச் செயலியின் பயனர் இடைமுகத்தை (user interface) மறுவடிவமைத்தல்’
  • அமைப்புகளை எளிதாக அணுகும் வசதியைச் சேர்த்தல்;
  • மேம்படுத்தப்பட்ட அறிவிப்புகள்.
#TamilSchoolmychoice

ஆப்பிள் செல்லினத்தில் அஞ்சல் விசைமுகத்தில் இருந்து வந்த ஒரு வழுவை (bug) நீக்கியுள்ளோம்.

ஆண்டிராய்டில் கூடிவரும் தேவைகள்

ஒவ்வோர் ஆண்டிராய்டு பதிப்பிலும், செயலிகள் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடுகளையும், இடைமுகத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்களையும் கூகுள் கூட்டிக்கொண்டே வருகிறது. பயனரின் வசதியை முன்னிறுத்தியே இவை சேர்க்கப்பட்டு வருகின்றன. தேவைகளுக்கு இணங்காத செயலிகள், குறிப்பாக முக்கியமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காதச் செயலிகள் கூகுள் பிளேயில் இருந்து நீக்கப்படும். இதுவரை செல்லினம் எந்தக் கட்டுப்பாட்டையும் மீறவில்லை. எனினும் புதிய ஆண்டிராய்டின் பயன்பாட்டுத்தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுதல்களைச் செய்துள்ளோம். மிக அண்மையில் வெளிவந்த ஆண்டிராய்டு 15-லும் செல்லினம் சிறப்பாக இயங்குகிறது என்பதை சில பயனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதன்மை செயலியின் பயனர் இடைமுகம்

ஆண்டிராய்டு செல்லினத்தின் இடைமுகம் ஏன் ஐபோனில் உள்ளது போல் இல்லை என்று பல பயனர்கள் அவ்வப்போது கேட்டு வந்துள்ளனர். இந்தப் பதிப்பில் இதனை மாற்றியமைத்துள்ளோம். இதன்வழி செல்லினத்தின் பதிவுகளையும் சொல்வன் வசதியையும் முதன்மைப் பக்கத்திலேயே பார்க்கலாம். அதோடு, விசைப்பலகை அமைப்பையும் எளிமைப்படுத்தியுள்ளோம். ஒரே தேர்வில் செல்லினத்தில் உள்ள விசைப்பலகைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அமைப்புப் பட்டியலின் முதல் இடத்திலேயே சேர்த்துவிட்டோம்!

ஐபோன் செல்லினத்தில் அஞ்சல் விசைமுகம்

ஐபோன் செல்லினத்தில் அஞ்சல் விசைமுகத்தின் வழி உள்ளிடும்போது, உயிர்-சுழற்சி சரியாக இயங்காமல் இருந்தது. ஒரு மெய்யெழுத்துக்குப் பிறகு உயிர் எழுத்தைத் தட்டினால் மெய்யெழுத்து உயிர்மெய் ஆகிவிடும். தொடர்ந்து உயிர் எழுத்தைத் தட்டத்தட்ட உயிர்மெய் எழுத்தில் உள்ள உயிர்க்குறியீடு மாறிக்கொண்டே வரும். க் தட்டி இ தட்டினால் கி வரும். தொடர்ந்து உ தட்டினால் கி எழுத்து கு ஆக மாறிவிடும். இதுபோல தொடர்ந்து உயிர் எழுத்தைத் தட்டினால் உயிர்மையில் உள்ள உயிர் மாறிக்கொண்டே வரும். இதைத்தான் உயிர் சுழற்சி (vowel rotation) என்கிறோம். அஞ்சல் விசைமுகத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பழக்கமான ஒன்றுதான். இதன் செயல்பாடு ஐபோன் அஞ்சலில் சில நேரங்களில் சரிவர இயங்காமல் இருந்தது. அந்த வழுவை புதிய பதிப்பில் நீக்கியுள்ளோம்.

இவ்விரண்டு பதிப்புகளையும் பயனர்கள் உடனே பெற்று தங்கள் திறன்கருவிகளில் உள்ள செல்லினத்தை இப்போதே மேம்படுத்திக் கொள்ளலாம். இணைப்புகளைக் கீழே தந்துள்ளோம்.

தொடர்புடையவை:

  1. அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்.
  2. கூகுள் பிளேயில் ஆண்டிராய்டு செல்லினம்.
  3. அப்பிள் ஆப்ஸ்டோரில் ஐபோன் செல்லினம்.