Home இந்தியா பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ!

97
0
SHARE
Ad
பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கோபிந்த் சிங் டியோ

புவனேஸ்வர் : ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை 3 நாட்களுக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 2025-ம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் என்னும் அயல்நாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்காக மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்ளும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தனது பங்கேற்பை முன்னிட்டு புவனேஸ்வரத்தில் பத்திரிகையாளர்களுடன் நடத்திய சந்திப்பில் பேசிய கோபிந்த் சிங், இந்தியா – மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ( வலது) கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் (இடது), ஆகியோருடன் கோபிந்த் சிங்

“நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் நீண்ட காலமாக வலுவுடன் திகழ்ந்து வருகின்றன. கலாச்சாரம், மதம் அடிப்படையில் நம் இரு நாடுகளுக்கும் இடையில் பல அம்சங்களில் நம்மிடையே பகிர்தல்கள் உள்ளன. வரலாற்றுபூர்வ உறவுகளும் நம் இருநாடுகளுக்கும் இடையில் உண்டு. பல விவகாரங்களில் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் நம்மால் மேலும் கூடுதலான ஒத்துழைப்பையும் செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியும். உலகம் மேலும் பெரிதாகிக் கொண்டிருக்கும் நிலையில் நம் இரு நாடுகளுக்கும் இடையிலான தளங்களும் நெருங்கி வருகின்றன” என அவர் தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

ஜெய்சங்கருடன் கோபிந்த் சிங்
#TamilSchoolmychoice

இந்திய வெளியறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரையும் கோபிந்த் சிங் டியோ சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்கள் இருவரும் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினர்.

மேலும், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் இளைஞர் மான்சுக் மண்டாவியா, ஆகியோரையும் சந்தித்து பயனான தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாக கோபிந்த் சிங் டியோ தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட கோபிந்த் சிங் டியோ, இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தின் அனுபவங்களின் மூலம் பல பயனான தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

மலேசியப் பேராளர்களுடன் கோபிந்த் சிங்

மலேசியாவை இலக்கவியல் தளமாக உருமாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட கோபிந்த் சிங், அனைத்துப் பிரிவினரையும் இணைத்துக் கொள்ளும் வகையில் தேசிய இலக்கவியல் உருமாற்றங்கள் இருக்கும் என்றும் யாரும் இதில் விடுபட மாட்டார்கள் என்றும உறுதியளித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 8 ஆம் நாள் (2025) இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். இன்று வெள்ளிக்கிழமை (ஐனவரி 10) இந்திய அதிபர் திரௌபதி முர்மு மாநாட்டை நிறைவு செய்து வைப்பார்.