பாங்காக்: கடந்த 3 நாட்களாக மலேசிய வருகை மேற்கொண்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பெங்குடன் பேச்சு வார்த்தைகள், விருந்துபசரிப்புகள் முடிந்து அவரை கம்போடியாவுக்கு வழியனுப்பி விட்டு, உடனடியாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் பறந்து சென்றிருக்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

அவரை தாய்லாந்து தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார் தாய்லாந்து பிரதமர் பேத்தோங்தார்ன் ஷினவத்ரா. அவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய அங்கம் வகித்திருப்பது கிளந்தான்-தாய்லாந்து எல்லையை இணைக்கும் கோலோக் ஆற்றின் மேல் இரண்டாவது பாலத்தை நிர்மாணிக்கும் திட்டமாகும்.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட பேத்தோங்தார்ன் ஷினவத்ரா, கோலோக் இரண்டாவது பாலம் தாய்லாந்து – மலேசியா இரு நாடுகளை இணைக்கும் நமது நட்புறவுக்கு உதாரணமாகத் திகழும் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டார்.
இணைய மோசடி, எரிவாயு ஆற்றல் உற்பத்தி பாதுகாப்பு தொடர்பாகவும் தங்களின் பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்ததாகவும் பேத்தோங்தார்ன் தெரிவித்தார்.