
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியில் தலைமையில் புதுடில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் நிதி ஆயோக் என்னும் மாநில முதலமைச்சர்களுடனான நிதி விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழ் நாட்டைப் புறக்கணிக்கிறது என்பதைக் காரணமாக முன்வைத்து அந்தக் கூட்டங்களை ஸ்டாலின் புறக்கணித்தார்.
“இப்போதும் ஒன்றிய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னும் அப்படியே இருக்கின்ற நிலையில் ஸ்டாலின் ஏன் இப்போது மட்டும் மனம் மாறி ஏன் நிதி ஆயோக் கலந்து கொண்டிருக்கிறார்?” என பிரபல அரசியல் ஆய்வாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் நாட்டின் நலன்களைப் புறக்கணித்து, தனது கடமையைச் செய்ய ஸ்டாலின் தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் விமர்சித்துள்ளார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தற்போது அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
அண்மையில் அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அறிவித்தது. எனினும் அமலாக்கத் துறையின் அந்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்ததன் மூலம் பிரதமரை ஸ்டாலின் அவமதிப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அத்தகையக் குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காகவும் ஸ்டாலின் புதுடில்லி சென்றார் என்றும் கூறப்படுகிறது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள காவிக்கொடியும் இல்லை என்று பதிலடி கொடுத்தார்.
அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதால், திமுகவை அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தும் வியூகத்தை முறியடிக்கும் நகர்வுகளில் ஒன்றாக ஸ்டாலின் புதுடில்லி சென்று மோடியுடம் நல்லிணக்கம் பாராட்டுகிறார் என்றும் தமிழ் நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
புதுடில்லியில் மோடியுடன் தனிப்பட்ட சந்திப்பையும் நடத்திய ஸ்டாலின் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் முன்வைத்தார்.