சிங்கப்பூர், மே 11 – சிங்கப்பூரிலுள்ள மெலன் பார்க் என்ற இடத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திய 9 மலேசியர்களை அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
இவர்கள் சிங்கப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் 200க்கும் மேற்பட்ட மலேசியர்களை ஒன்று கூட்டி ,கடந்த மே 8 ஆம் தேதி தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சிங்கப்பூரில் சட்டத்துக்குப் புறம்பாக கருஞ்சட்டை ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
அதில் மீடியா கார்ப் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் நடிகர்களான சாங் யாவ்டாங் மற்றும் சவுன் சென் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் என்று அந்நாட்டு காவல்துறை சார்பாக அறிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த கருஞ்சட்டை ஊர்வலம் தொடர்பாக காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு, இனி இது போன்ற சட்டத்துக்குப் புறம்பான ஊர்வலங்களை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.