புதுடெல்லி, மே 27- பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.
அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் புலோக் சாட்டர்ஜி மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளனர்.
ஜப்பான் செல்லும் பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு தலைநகர் டோக்கியோவில் தங்குகிறார். அங்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அப்போது ஜப்பான் அதிகாரிகளுடன் அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை நடத்துகிறார். நாளை மறுதினம் (29-ந்தேதி) ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயை சந்திக்கிறார். அப்போது ராணுவம், பொருளாதாரம், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகள் குறித்தும் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
மேலும் ஜப்பானில் தொழில் அதிபர்களின் கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங் இந்தியாவில் தொழில் தொடங்க வரும்படி ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஜப்பானில் இருந்து வருகிற 30-ந்தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டு செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 31-ந்தேதி டெல்லி திரும்புகிறார்.
ஜப்பான் புறப்படும் முன் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது ஜப்பான் மற்றும் தாய்லாந்து பயணம் இந்தியாவின் கிழக்கு நாடுகளின் கொள்கையில் புதிய அர்த்தத்தை ஏற்படுத்தும். ஆசியா பசிபிக் பகுதியில் அமைதி, சமாதானம் ஸ்திர தன்மை மற்றும் வளமையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். தற்போது ஜப்பானில் புதிய அரசு நல்ல நண்பரான பிரதமர் அபேயின் தலைமையில் நடந்து வருகிறது.
அவரது அரசு இந்திய-ஜப்பான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும். தாராள பொருளாதார மயத்தை பயன்படுத்தி ஜப்பான் தொழில் அதிர்கள் இந்தியாவில் தொழில் தொடக்க வாருங்கள். எப்போதும் இல்லாத அளவு ஏற்கனவே இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் பெருமளவில் செயல்படுகின்றன. இங்கு மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.
டெல்லி மெட்ரோ ரெயில் பணிகளை ஜப்பான் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அது போன்று மேலும் மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் மெட்ரோ ரெயில் பணிகளில் ஜப்பான் நிறுவனங்கள் பங்கு பெற முன் வர வேண்டும். ஆசியாவின் நாடுகளில் தாய்லாந்து இந்தியாவுடன் சிறந்த நட்பு நாடாக திகழ்கிறது.
பிரதமர் யின்லக் ஷினாவத்ராவுடன் நடத்தும் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும். இவ்வாறு அதில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.