கோலாலம்பூர், மே 30 – தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை ஊழல் குற்றச்சாட்டுக்களையும் புறக்கணித்து, பொதுத்தேர்தலில் சரவாக் மக்கள் தனக்கு முழு ஆதரவு தந்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தெரிவித்துள்ளார்.
மேலும் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தனது தலைமையில் இயங்கும் சரவாக் தேசிய முன்னணி, போட்டியிட்ட 31 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேல் அடைந்துவிட்டதாகவும் தாயிப் தெரிவித்துள்ளார்.
தாயிப் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு சிலரிடம் இரண்டு வழக்கறிஞர்கள் வெட்டுமர அனுமதிக்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒளிநாடாவை (வீடியோ) குளோபல் விட்னஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை மறுத்த தாயிப், அது ஒரு சாதாரண தொழில் ரீதியான பேச்சுவார்த்தை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோங் சியாங்கிற்கு 3 மாதங்கள் கெடு
தன்னை பற்றி அவதூறாகப் பேசிய ஜசெக கட்சியின் கோத்தா செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சோங் சியாங் ஜென், அடுத்த மூன்று மாத காலத்திற்குள் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தாயிப் கூறியுள்ளதாக பெர்னாமா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்குள், சோங் சுமத்திய அவதூறுகளையும்,குற்றச்சாட்டுக்களையும் திரும்பப்பெற்று, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தாயிப் கூறியுள்ளார்.
“சரவாக் மக்களில் சிலர், எதிர்கட்சிகளுடன் இணைந்து, இது போன்ற தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்குக் கருவியாகச் செயல்படுகின்றனர். இந்நிலை தொடருமானால் சரவாக் மாநிலம் வெளிநாட்டினருக்கு அடிபணிந்து கடுமையான பொருளாதார மற்றும் சமூக, அரசியல் பின்னடைவைச் சந்திக்க நேரிடும்” என்றும் தாயிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.