Home நாடு வான் ஜூனாய்டி சரவாக்கின் புதிய ஆளுநர் – முடிவுக்கு வந்த தாயிப் முகமட் சகாப்தம்!

வான் ஜூனாய்டி சரவாக்கின் புதிய ஆளுநர் – முடிவுக்கு வந்த தாயிப் முகமட் சகாப்தம்!

329
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் புதிய – 8வது ஆளுநராக வான் ஜூனாய்டி துவாங்கு இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) மாமன்னரால் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, வான் ஜூனாய்டி தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

வான் ஜூனாய்டியின் ஆளுநர் நியமனம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது. அவரின் நியமனத்தைத் தொடர்ந்து சரவாக்கின் அசைக்க முடியாத – வலிமை மிகுந்த – முதலமைச்சராக 33 ஆண்டுகள் கோலோச்சிய துன் அப்துல் தாயிப்பின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு  வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 2014 முதல் சரவாக்கின் ஆளுநராகப் தாயிப் பதவி வகித்து வருகிறார். அவரின் 3-வது தவணைக் காலம் அடுத்த மாதம் பிப்ரவரியோடு முடிவுக்கு வரவிருந்த நிலையில் வான் ஜூனாய்டி இன்று முதல் அவருக்கு பதிலாக பதவியேற்கிறார்.

அப்துல் தாயிப் மீது கடந்த காலங்களில் பல ஊழல் புகார்கள் எழுந்திருந்தாலும்,  அவரும் அவரின் குடும்பத்தினரும் எந்த விவகாரத்திலும் சிக்கியதில்லை.

#TamilSchoolmychoice

ஆளுநராக பதவி வகித்தபோதும் சரவாக் அரசியலில் அப்துல் தாயிப் முக்கியப் பங்கு வகித்தார் என்ற தகவலும் எப்போதும் உலவி வந்தது.

77 வயதான வான் ஜூனாய்டிக்கு இன்று மாமன்னர் துன் என்ற அந்தஸ்தைக் கொண்ட விருதையும் வழங்கி கௌரவித்தார். பொதுவாக ஆளுநர் பதவியேற்பவர்களுக்கு துன் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அவரின் பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சரவாக முதல்வர் அபாங் ஜொஹாரி உள்ளிட்ட முக்கிய அரசாங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அடுத்த 4 ஆண்டுகளுக்கு 26 ஜனவரி 2028 வரை வான் ஜூனாய்டி ஆளுநர் பொறுப்பை வகிப்பார்.

30 ஆண்டுகால அரசியல் பயணத்தைக் கொண்ட வான் ஜூனாய்டி ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரியாவார்.

1946-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, கம்போங் பெண்டாம் (இப்போது சாடோங் ஜாயா என அழைக்கப்படுகிறது) என்ற இடத்தில் பிறந்தவர் வான் ஜூனாய்டி. 1968 முதல் 1973 வரை காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், துணையமைச்சராகவும், அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

2008 முதல் 2013 வரை நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அவர் நாடாளுமன்ற மேலவையின் தலைவராக கடந்த ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.