Home கலை உலகம் இளையராஜா மகள் பவதாரணி காலமானார்

இளையராஜா மகள் பவதாரணி காலமானார்

707
0
SHARE
Ad

சென்னை : பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே புதல்வி பவதாரணி இலங்கையில் புற்றுநோய் பாதிப்பால், காலமானார். அவரின் நல்லுடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அதனைப் பெற அவரது குடும்பத்தினர் விமான நிலையத்தில் குழுமினர்.

பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 25) மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 47. மிக இளம் வயதில் அவர் மறைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பல படங்களில் பின்னணிப் பாடி பிரபலமானவர் பவதாரிணி. கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைப்பாளர்கள். இவர்கள் இசையமைத்த பல படங்களில் பவதாரிணி பின்னணி பாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.  ‘ராசய்யா’ படத்தில் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று மாலை கொண்டவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.