சிலாங்கூர், மே 30 – சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு அம்மாநில சுல்தானின் தலையீடு தான் காரணம் என்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிலாங்கூர் சுல்தான் சார்பாக இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால் தான் ஆட்சிக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையை சுல்தானின் செயலாளரான முகமட் முனீர் பானி இன்று வெளியிட்டார்.
அதன்படி “கடந்த மே மாதம் 20 ஆம் தேதி, சிலாங்கூர் மந்திரி பெசாரிடமிருந்து, ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியல் அடங்கிய கடிதம் ஒன்று அரண்மனைக்கு வந்தது. ஆனால் அதன் பின்பு அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
காலிட் இப்ராகிம் மீண்டும் நாடு திரும்பியவுடன், கடந்த மே மாதம் 26 ஆம் தேதி சுல்தானைச் சந்தித்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்வு பற்றி கலந்தாலோசித்தார்.
எனவே இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் எழுதுவோர் சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல், சுல்தானைப் பற்றி தவறான கருத்துக்களை பொதுமக்களிடம் பரப்ப வேண்டாம்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மே 20 ஆம் தேதி ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமட் தனது வலைத்தளத்தில், “சிலாங்கூர் சுல்தான் ஆட்சிக் குழு உறுப்பினர்களை இனவாரியாகத் தேர்ந்தெடுப்பதால் தான் தாமதம் ஏற்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த திங்கட்கிழமை ஆட்சிக் குழு பட்டியலுக்கு சுல்தான் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் இன்று காலை சிலாங்கூர் அரண்மனையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.