Home நாடு கிர் தோயோவுக்கு 12 மாத சிறை – மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

கிர் தோயோவுக்கு 12 மாத சிறை – மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

749
0
SHARE
Ad

Khir-Toyo-Featureபுத்ரா ஜெயா, மே 30 ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் முகமட் கிர் தோயோவுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே 12 மாத சிறைத் தண்டனை வழங்கி, வழக்கில் சம்பந்தப்பட்ட நில சொத்துக்களை பறிமுதல் செய்தும் உத்தரவிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்த கிர் தோயோவின் விண்ணப்பத்தை இன்று விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மறு உறுதிப்படுத்தியுள்ளது.

மந்திரி பெசாராக பதவி வகித்த காலத்தில், அரசாங்க பணியில் இருந்து கொண்டு விலை மதிப்புடைய இரண்டு நிலப்பட்டாக்களையும், ஷா ஆலாமிலுள்ள ஆடம்பர இல்லம் ஒன்றையும் கொள்முதல் செய்த காரணத்திற்காக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இன்று வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் ஏகமனதாக கிர் தோயோவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை மறு உறுதி செய்தனர்.

ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஏற்கனவே செய்திருந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கோ, மாற்றுவதற்கோ தங்களுக்கு உடன்பாடில்லை என்றும் கிர் தோயோவின் மேல் முறையீட்டுக்கான காரணங்களை தாங்கள் நிராகரிப்பதாகவும் நீதிபதிகள் ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.

தண்டனை ஒத்தி வைப்பு

கிர் தோயோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, உடனடியாக தாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யப்போவதாகவும் அதனால் தண்டனையை அதுவரை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா நீதிபதிகளிடம் விண்ணப்பித்தார்.

இருப்பினும், அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாபியின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தார்.

ஆனால், நீதிபதி அபு சாமா, கிர் தோயோவுக்கு 750,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கியதோடு, அவரது உச்ச நீதிமன்ற மேல் முறையீடு விசாரிக்கப்படும் வரை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒத்தி வைத்தார்.

இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டாவது சிலாங்கூர் மந்திரி பெசார் கிர் தோயோ ஆவார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஹருண் இட்ரிசும் இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.