Home அரசியல் நூருல் இசா சபாவில் நுழைவதற்கு தடை!

நூருல் இசா சபாவில் நுழைவதற்கு தடை!

878
0
SHARE
Ad

Nurul Izzah,மே 31 – பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் (படம்) சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டார்.

#TamilSchoolmychoice

கோத்தாகினபாலு விமான நிலையத்திலிருந்து தன்னை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு சபா குடிநுழைவு அதிகாரிகள் தற்போது ஏற்பாடு செய்து வருவதாகவும் நூருல் தெரிவித்துள்ளார்.

“என்னைத் திருப்பி அனுப்ப குடி நுழைவுத் துறை அதிகாரிகளுக்கு சபா முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகம் இதுதான். தேசிய முன்னணியே பொறுத்திருந்து பாருங்கள்!” என இன்று மாலை 7.30 மணியளவில் அனுப்பிய ட்விட்டர் குறுஞ்செய்தியில் நூருல் காட்டமாகக் கூறியுள்ளார்.

தனது வழக்கறிஞரான பெனாம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டெரல் லெய்கிங்கை சந்திக்கவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நூருல் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னால் மற்றொரு பிகேஆர் கட்சி உதவித் தலைவரான தியான் சுவாவும் பிப்ரவரி மாதத்தில் சபா மாநிலத்தில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்.

“மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபா மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர்களைக் கேட்டபோது அது ரகசியம் என்று எனக்கு கூறப்பட்டது” என்றும் நூருல் இசா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் உதவியாளர் ஹில்மான் இடாம் என்பவருக்கும் சபா மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெர்சே 2.0 இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், சபாவை பூர்வீகமாகக் கொண்டவருமான சுக்ரி ரசாப் என்பவரும் சபா குடி நுழைவுத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இன்றிரவு 8.20 மணியளவில், அனுப்பிய மற்றொரு ட்விட்டர் செய்தியில் தனது வழக்கறிஞர்களைச் சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று சபா குடி நுழைவு அதிகாரிகளின் துணையோடு தான் விமானத்தில் ஏற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் நூருல் கூறியுள்ளார்.