கோலாலம்பூர் – அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலமும், பங்களாவும் கையகப்படுத்தி குற்றத்திற்காக காஜாங் சிறையில் கடந்த 6 மாதங்களாக தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் டாக்டர் மொகமட் கிர் தோயோ நேற்று பரோலில் விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது கூட்டரசு நீதிமன்றம்.
அதன் பின்னர் கடந்த 6 மாதங்களாக காஜாங் சிறையில் கிர் தோயோ தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் அவருக்கு பரோல் வழங்கப்பட்டதையடுத்து, இரவு 7.15 மணியளவில் ஷா ஆலமில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, கிர் தோயோ இனி ஒவ்வொரு வாரமும் கிள்ளானில் உள்ள பரோல் வாரிய அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாத பரோல் காலகட்டத்தில், அவர் ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயாவில் தான் தங்கியிருக்க வேண்டும். மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் வீட்டில் தான் இருக்க வேண்டும். ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடக் கூடாது என அவருக்கு 41 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா கூறுகின்றது.
பரோல் முறைப்படி, பரோல் அதிகாரியின் கண்காணிப்பில் தண்டனைக் கைதி தன்னுடைய குடும்பத்தினரோடு சிறைக்கு வெளியே தனது மீதி தண்டனைக் காலத்தைக் கழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.