Home Featured நாடு கிர்தோயோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் நடவடிக்கை!

கிர்தோயோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் நடவடிக்கை!

717
0
SHARE
Ad

Khir Toyoபெட்டாலிங் ஜெயா-  ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டாக்டர் முகமட் கிர்தோயோவுக்கு வழங்கப்பட்ட டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் சுல்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இனிமேலும் டத்தோஸ்ரீ பட்டத்திற்குரிய தகுதியை கிர்தோயோ பெற்றிருக்கவில்லை என்பதால் சிலாங்கூர் சுல்தான் இம்முடிவுக்கு வந்திருப்பதாக மாநிலச் செயலர் டத்தோ முகமட் குஸ்ரின் முனாவி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு கிர்தோயோ டத்தோஸ்ரீ பட்டம் பெற்றார். இனி வரும் நாட்களில் அவரால் இப்பட்டத்தைப் பயன்படுத்த இயலாது என்பதுடன், மற்றவர்களும் அவரது பெயருடன் இப்பட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.

#TamilSchoolmychoice

“டத்தோஸ்ரீ பட்டம் பெறுபவர்கள் எத்தகைய முறைகேட்டிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதன் மூலம் தாங்கள் சுமந்திருக்கும் பதவி மற்றும் இத்தகைய பட்டங்களின் மாண்பை கட்டிக்காக்க வேண்டும். எனவே பட்டம் பெறுபவர்களுக்கு சமுதாயத்தில் உள்ள மதிப்பு குறித்து சுல்தான் மிகத் தீவிரமாகப் பரிசீலிக்கிறார்” என்று முகமட் குஸ்ரின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பதவியைப் பயன்படுத்தி 2 மனைகளை குறைந்த விலைக்கு வாங்கி முறைகேடு செய்ததாக கிர்தோயோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை கூட்டரசு நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், சிலாங்கூர் சுல்தான் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.