புது டெல்லி – ஆப்பிள் வாட்ச் எதிர்வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் புதிய தயாரிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆப்பிள் வாட்ச், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. முன்பதிவுகள் துவங்கிய சில மணி நேரங்களில் மே மாதம் வரைக்கும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.
மேற்கத்திய நாடுகளிலும் ஒரு சில ஆசிய நாடுகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆப்பிள் வாட்ச்-ஐ இந்தியாவில் விற்பனை செய்ய, ஆப்பிள் நிறுவனம் தயக்கம் காட்டி வந்தது. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ஐபோன் 6 எஸ்-ன் விற்பனை அந்நிறுவனத்திற்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளதால், ஆப்பிள் வாட்ச்சினை களமிறக்க தயாராகி உள்ளது.
‘ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்’ (Apple Watch Sport), ‘ஆப்பிள் ஸ்டைன்லெஸ் ஸ்டீல்’ (Apple Stainless Steel) மற்றும் ‘ஆப்பிள் வாட்ச் எடிசன்’ (Apple Watch Edition) என மூன்று ரகங்களில் வெளியாகி உள்ள ஆப்பிள் வாட்ச், திறன் கருவிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் வாட்ச்சின் குறைந்தபட்ச விலை 36,999 ரூபாயும், அதிகபட்ச விலை 1,768,700 ரூபாயும் இருக்கலாம் என ஆருடங்கள் கூறப்படுகின்றன.